திசை மாறும் CPM, விசிக ஓட்டுகள்?…பதற்றத்தில் தமிழக காங்கிரஸ்… திமுக கூட்டணியில் இடியாப்ப சிக்கல்!

Author: Babu Lakshmanan
21 September 2023, 9:10 pm
Quick Share

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணிக்கு பலத்த ஷாக் அளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் வெளியேறுவதாக அறிவித்து இருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கூட்டணி அமைந்து முழுமையாக மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் திடீரென்று இந்த முடிவை மார்க்சிஸ்ட் எடுத்து இருப்பதுதான் இதற்கு காரணம்.

இது எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதான கட்சிகளாக திகழும் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனாதளம் போன்ற கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தையும், தீராத தலைவலியையும் கொடுத்துள்ளது. ஆனால் இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனென்றால் இந்தக் கூட்டணி தொடங்கியது முதலே அதில் ஏனோதானோ என்று ஆர்வம் காட்டியது மார்க்சிஸ்ட் கட்சியும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும்தான்.

இண்டியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அண்மையில் உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மட்டும் பிரதிநிதியின் பெயரை தெரிவிக்காமல் இருந்து வந்தது.

அப்போதே அக்கட்சி மீது கூட்டணி கட்சிகள் சந்தேகப்பட ஆரம்பித்தன. முக்கிய கட்சிகள் அனைத்தும் பிரதிநிதிகளை அறிவித்த பிறகும் கூட சிபிஎம் ஏன் இப்படி இழுத்தடிக்கிறது என்ற முணுமுணுப்பும் கேட்டது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. அதில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனையும் நடத்தப்பட்டது. பின்னர் இண்டியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

பாட்னா, பெங்களூரு, மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற போதிலும் தொடர்ந்து இந்த கூட்டணியில் நீடிக்க இயலாது என்று மார்க்சிஸ்ட் தீர்மானித்து இருக்கிறது.

குறிப்பாக மேற்கு வங்காளம், கேரளாவில் கூட்டணி அமைக்க முடியாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் தனித்து போட்டியிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் பாரம்பரியமாக காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளன. எனவே அங்கு ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இல்லை என்பது வெளிப்படை.

மேலும் 2019 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதால் அந்த மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் 19 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி விட்டது. சிபிஎம் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இத்தனைக்கும் அப்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக மார்க்சிஸ்ட்தான் இருந்தது. ஆனால் 2024 தேர்தலில் அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதில் சிபிஎம் மிகுந்த கவனமாக உள்ளது. அதனால்தான் இண்டியா கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறி இருக்கிறது, என்பதே எதார்த்தமான உண்மை.

அதுபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுடன் சுமூகமான உறவில் மார்க்சிஸ்ட் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பரம விரோதிகளாக பார்க்கிறார்கள். எனவே அங்கும் தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு சிபிஎம் வந்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் கூறும்போது, “இண்டியா கூட்டணியில் அடிப்படை புரிதல் வேண்டும். அது இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்ட் மேற்கொள்ளாது. நாங்கள் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டால் ஓட்டுகள் சிதறி விடும். இது நடந்து விடக் கூடாது என்பதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி ஆய்வு செய்யப்படும். அதற்கேற்ப கூட்டணி அமைப்பதும், தொகுதி பங்கீடு செய்வது பற்றி முடிவு எடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் தீவிரமாக இறங்கி விட்டன. மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன் மிகுந்த நெருக்கம் காட்டும் திமுக தலைவர் ஸ்டாலினால் கூட இதை தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழகத்தில் நமக்கு பிரச்சனை வராமல் இருந்தால் சரி என்று அவர் நினைத்து விட்டாரோ, என்னவோ தெரியவில்லை.

இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கட்சியை தொடர்ந்து, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில்தான் காங்கிரசும், மார்க்சிஸ்ட்டும் உள்ளன. அதனால் இந்த இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படக்கூடிய நிலை உருவாகி உள்ளது.

2019 தேர்தலிலும் இதே திமுக கூட்டணியில்தான் காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் இருந்தன. அப்போது ஏற்படாத குழப்பமா இப்போது ஏற்படப் போகிறது?…என்ற கேள்வி எழுகிறதுதானே!

ஆனால் அப்போது எல்லோரையும் முந்திக்கொண்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதனால் வேறு வழியின்றி தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளிலும் வாக்களிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு மார்க்சிஸ்ட்
தள்ளப்பட்டது. இப்போதோ நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து இறுதி நிலவரம் தெரிய வந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஸ்டாலினும் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்.

மேலும் கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரண்டுக்கும் இடையேதான் தமிழகத்தில் நேரடி போட்டி நிலவியது.

இதன் காரணமாகவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இப்போதோ மும்முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் சூழல் காணப்படுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட் ஆகியவை பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் அறிவிப்பை வெளிப்படையாகவே வரவேற்று இருக்கின்றன.

இக் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும் கூட அதிமுகவும், காங்கிரசும் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளில்
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்தால் அதில் தவறில்லை என்று காங்கிரசை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம்.

இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக ஒருபோதும் வெளியேறி விடக்கூடாது. ஒருவேளை அப்படி நடந்து விட்டால் மார்க்சிஸ்ட், விசிகவினரின் ஓட்டுகள் நமக்கு விழாமல் போய்விடுமே என்று தமிழக காங்கிரஸ் பதறுகிறது.

“இப்படி ஒரு கூட்டணியில் இருந்து கொண்டே இன்னொரு கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கு யாராவது வாக்களிப்பார்களா? என்று கேட்டால் அதற்கான வாய்ப்பே இல்லை என்று மறுக்க முடியாது” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவில் அதிமுக உறுதியாக இருந்தால், திமுகவுக்கு அது குடைச்சல் தருவதாகத்தான் இருக்கும். ஏனென்றால் காங்கிரஸ் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதை சாக்காக வைத்தே நாங்கள் அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவோம். அதனால் கூடுதல் தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று திமுகவிடம் அடம் பிடித்து நெருக்கடி அளிக்கலாம்.

அதேநேரம் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு, டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றக் கோருதல், மணல் கொள்ளை, பட்டியல் இன மக்களுக்கு பொதுக் கோவில்களில் நுழைய அனுமதி மறுப்பு போன்ற பிரச்சனைகளில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை மார்க்சிஸ்ட்டும், விசிகவும் முன்னெடுத்துள்ளன.

மேலும் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்று இரண்டரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் திமுக ஆட்சியில் சொல்லிக் கொள்ளும்படி பட்டியல் இன மக்களுக்கு பிரமாதமாக எதையும் செய்து விடவில்லை என்ற எண்ணமும் இந்த கட்சிகளிடம் காணப்படுகிறது.

இதனால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விடுதலை சிறுத்தைகளும் முழு மனதுடன் திமுகவுக்கே வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவர்கள் காங்கிரசுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.

சிபிஎம் கட்சிக்கு ஒரு சில நாடாளுமன்ற தொகுதிகளில் வேண்டுமென்றால் 50 முதல் 60 ஆயிரம் வாக்குகள் இருக்கலாம். ஆனால் 35 இடங்களில் அக்கட்சிக்கு தொகுதி ஒன்றுக்கு 20 முதல் 25 ஆயிரம் வாக்குகளே இருக்கும். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் குறைந்த பட்சம் மார்க்சிஸ்ட் கட்சியின் 10 ஆயிரம் வாக்குகளாவது அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

இதேபோல விசிகவுக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ஓட்டுகள் வரை இருக்கலாம். இவர்களில் 15 ஆயிரம் பேர் மாற்றி அதிமுகவுக்கு வாக்களித்தாலும் காங்கிரசின் நிலைமை திண்டாட்டமாகிவிடும்.

25 ஆயிரம் ஓட்டு என்பது சிறிய அளவிலான வாக்குகள்தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் காங்கிரசின் கால்களை இது வாரிவிட்டு விடும் என்பது நிச்சயம்.

அதேநேரம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தகுந்தாற்போல் கூட்டணி அமைப்போம் என்று சிபிஎம் கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் காங்கிரசுடன் 10 தொகுதிகளை பகிர்ந்துகொண்டு தனது வேட்பாளர்களை நிறுத்த மார்க்சிஸ்ட் விரும்பவில்லை. இதற்குக் காரணம் 20 தொகுதிகளிலும் பொது வேட்பாளரை நிறுத்தினால் பாஜகவுக்கும், காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி என்ற நிலை உருவாகி அவற்றில் ஐந்து தொகுதிகளில் பாஜக வென்று விட்டால் கூட அது இரு கட்சிகளுக்கும் பேரிழப்பாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்துதான் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் நேருக்கு நேர் மோதுகிறது.

ஆனால் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக அதே காங்கிரசுடன் சிபிஎம் கூட்டு சேர்கிறது. பஞ்சாபிலும், டெல்லியிலும், ஆம் ஆத்மிக்கு எதிராக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறது. மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை எதிர்த்துப் போட்டியிடுவோம் என்று சொல்கிறது.

இப்படி மாநிலத்துக்கு மாநிலம் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதால்தான் 1980ல் 37 எம்பிக்களைக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு இப்போது மூன்றே மூன்று எம்பிக்கள்தான் உள்ளனர் என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 185

0

0