வரும் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 11:04 am
TN Amit - Updatenews360
Quick Share

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தும்படி பா.ஜ.க. தலைமை அக்கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்து முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

அதைத்தவிர தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா ஹெலிகாப்டரில் கந்தனேரிக்கு 8-ந்தேதி மாலை 3.30 மணி அளவில் வருகை தர உள்ளார். அதற்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம் அமைக்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அமித்ஷா அங்கிருந்து 4.45 மணியளவில் ஹெலிகாப்டரில் விசாகப்பட்டணம் செல்கிறார்.

மற்றொரு மத்திய அமைச்சர் வி.கே.சிங் விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வர உள்ளார்.

கந்தனேரியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தமிழக பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் ஜெகன்நாதன், பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் பார்வையிட உள்ளனர்.

Views: - 415

0

0