7 சிசுக்களை காவு வாங்கிய மருத்துவமனை.. என்ஓசியே வாங்காதது அம்பலம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 1:28 pm
Infant
Quick Share

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்தன.

ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
குஜராத்தில் நேற்று விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சோக நிகழ்வு நடைபெற்ற அதேநாளில் டெல்லி மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் இந்த மருத்துவமனை தீயணைப்பு துறையின் என்ஓசி சான்று இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எனவே மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவீன் கிச்சி மீது டெல்லி போலீஸ் ஐபிசி பிரிவு 304A, 336 மற்றும் 34 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது குறித்து பேசிய டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க் கூறுகையில், “இந்த மருத்துவமனைக்கு தீயணைப்பு துறை சார்பில் என்ஓசி சான்று வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தீ விபத்து ஏற்பட்ட விவேக் விஹார் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் என்ஓசி ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததன் மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் காவல்துறையினர் இது குறித்து உறுதி செய்யவில்லை.

Views: - 169

0

0