உச்சநீதிமன்ற தீர்ப்பால் திடீர் திருப்பம்… கவிழ்ந்தது மகாராஷ்டிரா அரசு… பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே..!!

Author: Babu Lakshmanan
29 June 2022, 9:56 pm
Uddhava Thackeray - Updatnenews360
Quick Share

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார்.

நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தவும் சட்டமன்ற செயலருக்கு கவர்னர் கோய்ஷாரி கடிதம் அனுப்பினார். இதனிடையே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று இரவு வரை விசாரணை நடைபெற்றது. அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் ஆளும் கட்சியின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்எல்ஏக்களும் வாக்களிக்கலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது, அந்தக் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணிநேரங்களிலேயே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதன்மூலம், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ன விருப்பப்பட்டார்களோ, அதனை கொடுத்து விட்டதாகவும், சிவசேனா அரசுக்கு ஆதரவு கொடுத்த சோனியா காந்தி, சரத்பவாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். அதோடு, அடுத்த அமைய உள்ள புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

விரைவில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

Views: - 549

0

0