திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘மெகா திருட்டு’ : ₹100 கோடி வரை கொள்ளை.. ஊழியரே கைவைத்தது அம்பலம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 6:51 pm

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் சுமார் 4 கோடி ரூபாயை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். அந்த தொகையில் வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய பல்வேறு வெளிநாடுகளின் கரன்சிகளும் அடக்கம்.

இந்த நிலையில் திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்த தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் அடிக்கடி கோவிலுக்குள் சென்று வந்து கொண்டு இருந்தார்.

இதனால் ஏற்பட்ட பழக்கத்தின் தொடர்ச்சியாக அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் பணி ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணிக்கை பணம் கணக்கிடும் பகுதியில் இருந்து வெளியில் வந்த அவரை பிடித்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலர்களை திருடி கடத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

அப்போது அதற்கு முன் சுமார் பல ஆண்டு காலம் அவர் இதே போல் தினமும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு டாலர்களை கடத்தி திருடியதும், அந்த பயணத்தை பயன்படுத்தி சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் அதிக மதிப்பு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது பற்றி அறிந்த தேவஸ்தான நிர்வாகம் விவகாரம் வெளியில் தெரிந்தால் தேவஸ்தானத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு தேவஸ்தானம் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி இந்த விவகாரத்தை லோக் அத்தாலத்திற்கு கொண்டு சென்றது.

இந்தத் திருட்டு தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் என் 24/2023 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லோக் அத்தாலத்தில் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டு ரவிகுமார் திருடிய காணிக்கை பணத்தை கொடுத்து வாங்கிய சொத்துக்களில் ஒரு பகுதியை ரவிக்குமார் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பது போல் எழுதி வாங்கி கொண்டனர்.

அதிகாரிகளின் இந்த முடிவிற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் அப்போது ஒப்புதல் அளித்திறந்தது. ஆனால் இது பற்றி அறங்காவலர் குழுவினர் செய்தியாளர்களிடம் தப்பி தவறி கூட வாய் திறந்து தகவல் தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் ஏழுமலையானின் பணத்தை திருடியவர் அதே பணத்தில் வாங்கிய சொத்தை அதே ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கி சாதனை படைத்திருக்கிறார் என்பது வேறு விஷயம்.

ஆனால் இந்த விவகாரத்தில் ரவிக்குமார் உண்டியலில் இருந்து திருடிய பணத்தின் மூலம் வாங்கிய சொத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் தேவஸ்தானத்திற்கு அவர் நன்கொடையாக கொடுப்பது போல் எழுதி வாங்கி கொண்டனர் என்றும் மீதமிருந்த மற்ற பல பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர், தேவஸ்தான உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் தங்களுடைய உறவினர்களின் பெயர்களில் எழுதி வாங்கிக் கொண்டனர் என்றும் பெரும் குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.

ரவிக்குமார்

கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த குற்றச்சாட்டுகள் ஆட்சியாளர்கள் மீது இருந்த அச்சம் காரணமாக குற்றச்சாட்டுகளாகவே இருந்து வந்தன.

இது பற்றி ஆந்திர மேல் சபை உறுப்பினர் ஒருவர் மாநில அறலையத் துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் சமீபத்தில் புகார் அளித்திருந்தார் .

அதன் அடிப்படையில் அமைச்சர் விவேகானந்த ரெட்டி ஆந்திர சட்டமன்ற மேல் சபையில் இந்த முறைகேடு, மோசடி ஆகியவை பற்றி பேசினார். அப்போது நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக அப்போது அறங்காவலர் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

எனவே தமிழ்நாட்டை சேர்ந்தவரான ரவிக்குமாரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து காணிக்கை பணத்தை திருடி அதன் மூலம் வாங்கிய சொத்துக்களில் தேவஸ்தானத்திற்கு வழங்கிய சொத்துக்கள் தவிர மற்ற சொத்துக்களை யார், யாருக்கு எந்த சூழ்நிலையில் எழுதி கொடுத்தார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தாங்கள் உறவினர்களில் பெயர்களில் எழுதி வாங்கி கொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் ஏற்பட்டுள்ளன.

100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பு உள்ள அமெரிக்க டாலர்களை ஊழியர் ஒருவர் கோவிலுக்குள் இருந்து கடத்தி வந்து விட்டார் என்ற தகவல் அறிந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

உண்டியல் காணிக்கை பணத்தை கணக்கிடுவது போல் நடித்து திருடிய வெளிநாட்டு கரன்சிகளை பதுக்கி எடுத்து வருவதற்காக ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிது படுத்தி கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அவருக்கு இந்த ஆலோசனையை வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவர்கள் வழங்கி இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!