சுடுகாட்டு செக்யூரிட்டியால் வெளியான கள்ளக் காதல்.. பெங்களூரில் ஒரு அபிராமி!
Author: Hariharasudhan14 அக்டோபர் 2024, 4:43 மணி
கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று எரித்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு உட்பட்ட ராம்நகர் மின்மயானத்துக்கு ஒரு ஆணும், பெண்ணும் 2 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை நள்ளிரவு கொண்டு வந்து எரித்துள்ளனர். பின்னர், அடுத்த 15 நாட்களுக்குள் மீண்டும் அதே ஒரு ஆணும், பெண்ணும் 11 மாத குழந்தையைக் கொண்டு வந்து எரித்துள்ளனர். எனவே, இது அங்கிருந்த காவலாளிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் அவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, இரண்டு குழந்தைகளும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். அப்படியானால், மற்ற உறவினர்கள் எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க, அவர்களை தடுத்து அங்கேயே நிறுத்தியுள்ளார். பின்னர், இது குறித்து போலீசாருக்கு காவலாளி தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, மின்மயானத்திற்கு வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அதில், அவர்களில் 24 வயதான பெண் ஸ்வீட்டி என்பதும், மற்றொரு ஆண் 27 வயதான கிரகோரி பிரான்சிஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பிரான்சிஸ் கள்ளக்காதலர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: ‘நான்’ பட பாணியில் தாய் செய்த சம்பவம்.. மகன் கொடூர கொலை!
அது மட்டுமல்லாமல், கள்ளக்காதலன் உடன் இருக்க விரும்பிய ஸ்வீட்டி, கெம்பேகவுடா சதுக்கம் அருகில் உள்ள மஞ்சுநாத நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். இவர்கள்து உல்லாச உலகிற்கு முதலில் 2 வயது மகள் கபிலா இருந்ததால் அவரை அடித்துக் கொன்று மின்மயானத்தில் எரித்துள்ளனர். பின்னர், உல்லாசமாக இருந்தபோது 11 மாத கைக்குழந்தை கபிலன் அழுததால், அவரையும் கொன்று சுடுகாட்டில் எரித்தபோது தான் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.
முக்கியமாக, இரு குழந்தைகளின் உடம்பிலும் காயம் இருந்ததே மின்மயான காவலாளிக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனிடையே, தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என ஸ்வீட்டியின் கணவர் டி.ஜே.ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்துள்ளார்.
முன்னதாக, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது இரு குழந்தைகளையும் கொன்ற குன்றத்தூர் அபிராமியின் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை விவரங்கள் வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0