திமுக ‘ரூட்’டில் பயணிக்கும் PK…?சோனியாவுக்கு வைத்த செக்..! தப்புமா காங்கிரஸ்..!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 7:35 pm
Quick Share

வலுவான கூட்டணி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்துவதற்காக, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

குறிப்பாக, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக 3-வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முட்டுக்கட்டைபோட்டு விடலாம் என்பது அவருடைய எண்ணம்.

mamata - sonia - updatenews360

முதலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில்தான் பிரசாந்த் கிஷோர் தீவிரமாக இறங்கினார்.

புது ரூட்

ஆனால் அவருடைய அந்த முயற்சிக்கு ஒரு சில கட்சிகளே ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் அல்லாத வலுவான எதிர்க்கட்சிகளின் அணியை உருவாக்குவது கடினம் என்பதை புரிந்துகொண்ட அவர் பின்பு ‘ரூட்’டை மாற்றினார்.

அதைத்தொடர்ந்து சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை அடிக்கடி சந்தித்து பேசியும் வருகிறார். கடந்த வாரத்தில் மட்டும் டெல்லியில் சோனியாவை மூன்று முறை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பல்வேறு
பிரச்சினைகளை விவரித்ததோடு, 11 மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வியூகம்

தவிர பாஜகவை எதிர்த்து குறைந்தபட்சம் 370 தொகுதிகளிலாவது, காங்கிரஸ் தனித்து வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். தமிழகம் மராட்டியம், மேற்கு வங்கம், ஆகிய 3 மாநிலங்களில், கூட்டணி அமைத்தும் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்களில் தனித்தும் போட்டியிட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

மேலும் தனக்கு காங்கிரசில் உரிய பதவி தந்து, அதிகாரமும் கொடுத்தால் அதிரடியாக இன்னும் பல புதிய வியூகங்களை வழங்கத் தயார் என அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

- prasanth kishor - updatenews360

இதை சோனியா, ராகுல் உள்பட கட்சியின் மூத்த தலைவர்களில் பலர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையப் போகிறார், அவருக்கு கட்சியில் செயல் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று பல்வேறு தகவல் ஊடகங்களில் பரவியது. டெல்லியில், வருகிற 29ம் தேதி, அவர் காங்கிரசில் முறைப்படி இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திடீர் ஒப்பந்தம்

இந்த நிலையில்தான், அண்மையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது, அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய ‘ஐ -பேக்’ நிறுவனம் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பது என கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

CM KCR-Prashant Kishor discussion continues for 2nd day

மேலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைந்தாலும் கூட 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு வெற்றிக்கான வியூகங்களை வகுத்துக் கொடுக்க, அவர் உறுதி அளித்திருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் 2024 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இணைய வேண்டும் என, சந்திரசேகர ராவிடம் அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதிருப்தி

ஆனால் 2 நாட்கள் ஹைதராபாத்தில் முகாமிட்டு முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ராமராவ் இருவரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததையும், தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருப்பதையும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் பலர் விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இதை கட்சி மேலிடத்திற்கு சூசகமாக கூறும் வகையில் தமிழகத்தை சேர்ந்த காங் எம்பியான மாணிக்கம் தாகூர், ‛உங்கள் எதிரியுடன் நண்பர்களாக இருப்பவரை ஒருபோதும் நம்பாதீர்கள். இது சரிதானா?…’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சந்திரசேகர ராவ், காங்கிரஸ் அல்லாத கூட்டணியை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி எதிரெதிர் துருவங்களுக்கு ஆலோசகராக இருப்பதால் அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் மீது சந்தேக கண் வைத்துள்ளன.

நெருக்கடி

இதுகுறித்து, டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2023ல் தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்த மாநிலத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இதுவரை காங்கிரஸ்தான் உள்ளது.

2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி அபார வெற்றி கண்டிருந்தாலும்கூட மறு ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரசை 3-வது இடத்துக்கு தள்ளியது.

Rahul_Sonia_UpdateNews360

அதனால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திப்பதா? அல்லது பிரசாந்த் கிஷோர் கூறுவதுபோல தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்ற குழப்பமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்திலும், மராட்டியத்திலும் இதே நிலை
காங்கிரசுக்கு ஏற்படலாம்.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாகத்தான் இருக்கும். அதேபோன்ற சிக்கல் தெலுங்கானாவிலும் உருவாகும். தமிழகத்திலும் காங்கிரசுக்கு முன்புபோல தொகுதிகளை திமுக ஒதுக்குமா? என்பது சந்தேகம்தான்.

இரட்டை வேடம்

இத்தகையதொரு இக்கட்டான நிலை ஏற்படக்கூடும் என்று கருதித்தான் மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் அதற்காக சில தியாகங்களை செய்ய காங்கிரஸ் முன் வரவேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பார் போலிருக்கிறது.

ஒருவேளை, காங்கிரசில் சேர்ந்த பிறகு மாநிலக் கட்சிகளுடன் தனது ஐ-பேக் நிறுவனம், தேர்தல் வியூகம் வகுக்க முடியாது என்பதால் பிரசாந்த் கிஷோர் முந்திக்கொண்டு இப்படி செய்து விட்டாரோ என்று கருதவும் தோன்றுகிறது.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான கட்சிக்கு தேர்தல் வியூகம், அதே மாநிலத்தில் 2024 தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் காங்கிரஸ் கூட்டணி என்று பிரசாந்த் கிஷோர் கூறுவதை இரட்டை வேடம் என்றே காங்கிரசின் மூத்த தலைவர்களில் சிலர் கருதுகின்றனர்.

ஏனென்றால் அவருடைய ஐ-பேக் நிறுவனம் வர்த்தக ரீதியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எந்தக் கட்சியிடம் பணமும், செல்வாக்கும் இருக்கிறதோ அங்குதான் ஐ-பேக் வேலை செய்யும் என்பதும் வெளிப்படை.

எனவேதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்து கொண்டதை காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரே நேரத்தில் ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும் வைத்ததால் பாதகம்தான் ஏற்படும் என்று கருதி அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

எனவே பிரசாந்த் கிஷோர் 2024-ல் காங்கிரசுக்கு மட்டுமே தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்துக் கொடுக்க வேண்டுமென்பது அவர்களின் ஒரே விருப்பமாக உள்ளது. அதற்கு முன்பாக மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தவிர வேறு யாருக்கும் ஐ-பேக் வியூகம் வகுத்து தரக்கூடாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்” என அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

காங்கிரஸ் மேலிடம் என்ன செய்யப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 783

0

0