நாட்டையே உலுக்கிய புனே சம்பவம்… 2 உயிர்களைக் கொன்ற 17 வயது சிறுவனுக்கு கரிசனமா..? நீதியின் முன் எழுந்த 5 கேள்விகள்…!!

Author: Babu Lakshmanan
21 மே 2024, 5:09 மணி
Quick Share

மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதமான நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த Porsche கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த, அஸ்வினி கோஸ்தா, அனிஷ் துதியா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு பார்ட்டி முடிந்து போதையில் அந்த காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. மேலும், விபத்தை ஏற்படுத்திய கார், ஆர்டிஓவில் பதிவு கூட செய்யாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக சில வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார் அதிவேகமாகச் சென்று பைக் மீது மோதும் ஒரு சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அதேபோல விபத்தை ஏற்படுத்திய அந்த 17 வயது சிறுவனை அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை சிறார்களுக்கான நீதிமன்றம் வழங்கியது. விபத்து நடந்த 15 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்த நிலையில், சிறுவனின் தந்தையை மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் வைத்து புனே போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஐபிசி 304 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார், அந்த சிறுவனின் வயது 17 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆன நிலையில், மைனராக கருதக்கூடாது என்றும், வளர்ந்த நபராகவே கருதி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: சாலையோரம் நடந்து சென்ற கர்ப்பிணி… அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த சம்பவம் விபத்து அல்ல…? கொலை என்றுக் கூறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அதாவது, இந்த விபத்திற்கு காவல்துறை, அரசு நிர்வாகம், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வணிகவரித்துறையும், குறிப்பாக, அந்தக் காரை ஆர்டிஓவில் பதிவு செய்யாமல், விற்பனை செய்த கார் ஷோ ரூமின் உரிமையாளரின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

ஒருவேளை, அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்துடன் அந்த சிறுவன் மது அருந்திய ‘பப்’ (PUB) மூடப்பட்டிருந்தாலோ, அல்லது 18 வயது ஆகாத நபருக்கு மதுவை வழங்க முடியாது என்று சம்பந்தப்பட்ட பப் நிர்வாகம் கூறியிருந்தாலோ, அல்லது காரை முறைப்படி பதிவு செய்யாமல் வழங்க முடியாது என்று கார் ஷோ ரூம் தெரிவித்து இருந்தாலோ, அல்லது மைனரான தனது மகனுக்கு காரை ஓட்டுவதற்கு வழங்க முடியாது என்று அவரது பெற்றோர்கள் கூறியிருந்தாலோ, அல்லது நம்பர் பிளேட் கூட இல்லாமல் சாலையில் ஓடிய காரின் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தாலோ, அந்த இரு உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஹெல்மெட் போடாததற்கும், லைசென்ஸை எடுத்து வராததற்கும் சுற்றி வளைத்தும், ஓடஓட விரட்டியும் பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார், நம்பர் பிளேட் கூட இல்லாமல் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.

மாறாக, இந்த விபத்துக்காக, விடுமுறை நாளிலும் தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம், குற்றவாளியை தண்டனையில் இருந்து தப்பிக்க வைப்பது போல, ஜாமீன் வழங்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், சாலை விபத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி 300 வார்த்தைகள் கட்டுரை எழுதச் சொல்லியும், மீண்டும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காது என்று பெற்றோர்களை உறுதி அளிக்கச் சொல்லியும் நீதிமன்றம் உறுதி மொழி வாங்கியிருப்பது என்ன மாதிரியான செயல் எனத் தெரியவில்லை என்று முனுமுனுக்கின்றனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு போக்குவரத்து விதிகளைப் பற்றி அறிந்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும், உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையுமே ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தாலே 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் இந்தக் காலத்தில் 2 உயிர்களைக் கார் ஏற்றிக் கொலை செய்த நபருக்கு 15 மணிநேரத்தில் ஜாமீன் கிடைக்கப்பெற்றிருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல், விபத்தை ஏற்படுத்திய நபர், தொழிலதிபரின் மகன் என்பதால், அவரைக் காப்பாற்ற எம்எல்ஏ சுனில் டிங்ரே முயற்சிப்பதாக வெளியாகும் தகவல் அவமானத்தின் உச்சம் என்று வேதனை தெரிவிக்கும் நெட்டிசன்கள், அந்த சிறுவன் காரை ஓட்டவில்லை என்று எம்எல்ஏ கூறிய நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியால், அவரது இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், இவரைப் போன்றவர்களை கட்சியில் வைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்தவர்கள் யார் என்று கூட தங்களுக்கு தெரியாத நிலையில், நாளை எனக்கோ, உனக்கோ கூட இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் இறந்தவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க அனைவரும் துணிந்து நிற்போம் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கரங்களை கோர்த்து வருகின்றனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 227

    1

    0