ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட பள்ளிகள் திறப்பு: மீண்டும் புர்கா அணிந்து வந்த மாணவிகள்…ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிய தடை..!!

Author: Rajesh
14 February 2022, 11:38 am

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்டிருந்த 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர்.

இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த 9ம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.

இதனிடையே, ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேலும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மாநிலத்தில் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும், உடுப்பியில் உள்ள அரசு பள்ளியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் நீதிமன்ற உத்தரவையும் மீறி மீண்டும் புர்கா அணிந்து வகுப்புகளுக்கு செல்லும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளதால் மீண்டும் சர்ச்சை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!