ரஷ்யா – உக்ரைன் போரால் இரு அணிகளாக பிரியும் நாடுகள்…? இந்தியா எந்தப்பக்கம்.. நிலைப்பாடு என்ன..?

Author: Babu Lakshmanan
24 February 2022, 1:30 pm
Quick Share

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின் , உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் ராணுவ தளவாடங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியர்களை மீட்க உக்ரைன் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதால், தலைநகர் கீவ்-க்கு இந்தியர்கள் யாரும் வரவேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 27 நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்ததோடு, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்கான விளைவை ரஷ்யா எதிர்கொண்டாக வேண்டும் என தெரிவித்துள்ளன.

இதனிடையே, ரஷ்யா தாக்குதல் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று உக்ரைன் தூதரகம் வலியுறுத்தியது. உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பேச வேண்டும் எனக் கூறப்பட்டது. ,இதைத்தொடர்ந்து, உக்ரைன்- ரஷியா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையை வகிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்கே சிங் தெரிவித்துள்ளார். மேலும், அமைதியான வழியில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான போர் பதற்றத்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் விளக்கமளித்துள்ளது.

Views: - 1050

0

0