பஜ்ரங் தள நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை : ஷிவமொக்காவில் பள்ளிகள் மூடல்

Author: kavin kumar
22 February 2022, 10:48 pm

கர்நாடகாவில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து, ஷிவமொக்கா மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகியாக இருந்தவர் ஹர்ஷா. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது, கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து இந்தக் கொலை நடந்திருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியதால் இருதரப்பு மக்கள் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. ஹர்ஷா கொலையை கண்டித்து ஷிவமொக்காவில் பல்வேறு பகுதிகளில் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாவட்ட ஆட்சியர் செல்வமணி, கூடுதல் டி.ஜி.பி. முருகன், போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் ஆகியோர் சிகேஹட்டி, ரவிவர்மா வீதி, கே.ஆர்.பேட்டை தீர்த்தஹள்ளி சாலை, பாரதி காலனி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க போலீசாருக்கு அமைச்சர் அரக ஞானேந்திரா உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஹர்ஷா கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 21 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஷிவமொக்கா எஸ்.பி. தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மாவட்டத்தில் தடை உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை காலை வரை அமலில் இருக்கும் எனவும், அதுவரை பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!