காளைகள் துன்புறுத்தப்படுதா? ஒரு சில போட்டோவ ஆதாரமா வெச்சு நிரூபிக்க முடியாது : விலங்குகள் அமைப்புக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2022, 5:53 pm

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. ஆனால் பாரம்பரிய விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்று தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராட்டம் நடந்தது. சென்னை மெரினாவில் திரண்டு இளைஞர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை உலகமே வியந்து பார்த்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கடந்த 2017-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ஆனால் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும் பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளன.

இதனிடையே, தமிழக அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஜல்லிக்கட்டு பாரம்பரிய தமிழக விளையாட்டு. கிராமங்கள் முதல் உட்கிராமங்கள் வரை நடத்தப்படுகிறது.
விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை. விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தவறானது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பான ஏற்பாடு செய்யப்படுகின்றன.

விலங்கு வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையான தடை விதிக்கக்கூடாது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அவசர சட்டம் இயற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இதன்படி சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என சில புகைப்படங்களை விலங்குகள் அமைப்பு காட்டியது.

இத்தகைய சில புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு போதுமானது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை இயற்றிய சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்த நீதிபதிகள்,
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும்29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!