வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.. மத்திய அரசு கொடுத்த பதில்.. ராகுல் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 8:12 pm

வயநாடு மலைப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

வயநாடு மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை இன்று பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான வி.முரளீதரன், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராகவே அறிவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள முரளீதரன், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், நிலச்சரிவு உள்ளிட்டவைகளை தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடம் இல்லை என நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதெல்லாம் தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமே இல்லை என்றார்.

அப்போது தேசியப் பேரிடர் அறிவிப்பு எப்போது சாத்தியம் என்கிற விவாதங்களும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!