8 ஆண்டுகள் காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? யாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது நிதி அமைச்சகம்? ப. சிதம்பரம் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 4:11 pm

கடந்த 8 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. காலிப்பணியிடங்கள் குறித்தோ அதை நிரப்புவது குறித்தோ அரசு ஏன் வாய் திறக்கவில்லை என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- இது கொண்டாட்டத்திற்கும் மனநிறைவுக்குமான நேரம் கிடையாது என்று பொருளாதார நிலை குறித்து நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை நிதி அமைச்சருக்கு விடுக்கப்பட்டதா? அல்லது பிரதமருக்கு நிதி அமைச்சரால் விடுக்கப்பட்டதா? மக்களுக்கு இந்த எச்சரிக்கை தேவையில்லை.

ஏனெனில், வேலைவாய்ப்பு இன்மை அதிகரிப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் யாரும் கொண்டாட்டத்தில் இல்லை.

வேலை தேடிய 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியது வரவேற்புக்குரியது. ஆனால், 10 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

தற்போது எழும் கேள்வி என்னவென்றால், ஏன் கடந்த 8 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. காலிப்பணியிடங்கள் குறித்தோ அதை நிரப்புவது குறித்தோ அரசு ஏன் வாய் திறக்கவில்லை.

பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதிக்கு மத்தியில் 75 ஆயிரம் நியமனங்கள்தான் செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவு கொள்ள வேண்டும். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 75 ஆயிரம் பேருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?