பொறுமையாக இருந்தால் ஒரு வாட்டி பாக்கலாம்.. “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைவிமர்சனம்..!

Author: Rajesh
28 April 2022, 11:13 am
Quick Share

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

அந்த படம், சினிமா ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்ததோடு, அந்த படம் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, இந்த கூட்டணி மீண்டும் இணைய போகிறது என்ற தகவல் வந்ததிலிருந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில் சமந்தா இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் ஏறி இருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

சரி கதைக்கு வருவோம்.. விஜய் சேதுபதியின் குடும்பத்தில் பொண்ணு கொடுத்தாலும், பொண்ணு எடுத்தாலும் அந்த குடும்பத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கும் என பயந்து, அந்த ஊரில் இருப்பவர்கள் யாரும் அந்த குடும்பத்தில் பொண்ணு தராமலும் எடுக்காமலும் இருக்கின்றனர்.

இந்த தடைகளை கடந்து, விஜய் சேதுபதி அப்பா திருமணம் செய்து கொள்கிறார், ஆனால் விஜய் சேதுபதி பிறந்தவுடன் அவரும் இறந்து விடுகிறார். அவரது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லாமல் போக, விஜய் சேதுபதியும் தனக்கு துரதிஷ்டம் அதிகமாக இருக்கிறது என கருதி, தனது அம்மாவையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த சமயத்தில் ஒரே நேரத்தில் சமந்தா மற்றும் நயன்தாராவை சந்திக்கிறார் விஜய்சேதுபதி, இருவர் மீது காதலிலும் விழுகிறார். இதன் பின்பு என்ன ஆனது? இருவரையும் திருமணம் செய்தாரா இல்லையா என்பது தான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஒன்லைன்.

காதல் கதையம்சம் கொண்ட கதைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் திரைக்கதை அமைத்து, அதில் வித்தியாசத்தை கொடுப்பதில் சிறந்தவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்தப்படத்திலும் அவர், பூந்து விளையாடி உள்ளார். சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் சுவாரசியம் கலந்து காமெடியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

சமந்தாவை முதல் முதலில் சந்திக்கும் காட்சியும், நயன்தாராவை முதன் முதலில் சந்திக்கும் காட்சியையும், திரையில் மிகவும் ரசிக்கும்படி உள்ளது.
சமந்தாவும் சரி, நயன்தாராவும் சரி, அழகுக்கு குறையில்லை, நடிப்பில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். மாடர்ன் உடையில் சமந்தாவும், சேலையில் நயன்தாராவும் பார்க்க அவ்வளவு அழகாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் விஜய் சேதுபதி தனது நடிப்பால் இருவரையும் ஓவர்டேக் செய்துள்ளார் என்றே தெரிகிறது.
இரு பெண்களிடம் காதலில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஆணின் நிலையை அழகாக தனது நடிப்பில் வெளிப்படித்துள்ளார். காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

கண்மணியாக வந்த நயன்தாராவும், கதீஜாவாக வந்த சமந்தாவும் காதலனுக்காக இருவரும் போட்டிபோட்டுக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வண்ணத்தில் நடித்துள்ளார்கள். கண்மணியின் தங்கை, தம்பியாக வரும் இருவரின் நடிப்பும் க்யூட். லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, நடிகர் பிரபு படத்தின் முக்கிய தூண்களாக படத்தை தாங்கி நிற்கிறார்கள். நடிப்பில் களமிறங்கியுள்ள நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்தின் நடிப்பு ஓகே.

வசனங்கள் தான் இந்த படத்தை நகர்த்தி கொண்டு செல்கிறது என்று கூட சொல்லலாம், மேலும் காட்சி அமைப்பிலும் விக்னேஷ் சிவன் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணமாக இருந்தது. தனது 25வது படத்தில் அனிருத் தனது மொத்த வித்தையையும் இந்த படத்தை இறக்கியுள்ளார். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி பூந்து விளையாடி உள்ளார்.

அனிருத் விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா என்ற வரிசையில் இந்த படத்தை ரசிக்கலாம். இருவரையும் திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை உள்ளது. ஒரே வீட்டில் மூன்று பேரும் செய்யும் லூட்டிகள் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத இந்த படத்தை மிகவும் பொறுமையாகவே பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் எங்கேயும் அவ்வளவாக போரடிக்காமல் நகரும் திரைக்கதை கூடுதல் சிறப்பு. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை காற்றுவாக்கில் நண்பர்களுடன் சென்று ரசிக்கலாம்.

Views: - 1077

5

0