திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது:ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

1 December 2019, 10:41 am
Tvmalai Deepam Festival Flag Hoisting
Quick Share

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது திருக்கார்த்திகை தீபத் திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடி மரம் அருகே எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா என முழக்கமிட கோவிலின் முன்புள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். மேலும் வரும் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.