தோசங்கள் நீக்கும் அரகண்டநல்லூர் புற்று மாரியம்மன்

13 September 2020, 5:00 am
Quick Share

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் புற்று மாரியம்மன் ஆலயம், தென்பெண்ணையாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் அம்மன் புற்று வடிவில் எழுந்தருளி பக்தர்களைக் காத்து வருகிறாள். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ராகு காலத்தில் இந்த புற்று மாரியம்மனை தரிசிக்க பிள்ளைப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது. பலவிதத் தடைகளால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் திருமண வாய்ப்புகள், விரைவில் எளிதாகவும், மனம் விரும்பியபடியும் நிறைவேற ராகு காலத்தில் இந்த புற்று மாரியம்மனுக்கு தீபமேற்றி பல இளைஞர்கள் வழிபடுவதைக் காணமுடிகிறது.

ஜாதகத்தில் நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்று பிரச்னை இருக்கக்கூடுயவர்கள் ஞாயிறு அன்று ராகு காலத்தில் இந்த புற்று மாரியம்மனை தரிசித்து வந்தால் தோஷங்கள் முறிவு அடையும். சித்திரை மாதத்தில் லட்சதீபம், சந்தன காப்பு அலங்காரம், 1008 விளக்கு பூஜை, அன்னதானம், மாலையில் தீபாராதனை என புற்று மாரியம்மன் ஆலயம் சுற்றுப்பட்டு கிராமவாசிகளின் கைங்கர்யத்தால் சுடர்விட்டுப் பிரகாசிக்கும். ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் அம்மனுக்கு பெண் பக்தர்கள் 108 லிட்டர் பாலபிஷேகம் செய்கிறார்கள்.

மார்கழி மாதம் முப்பது நாட்களும் நாளுக்கு ஒருவராக முப்பது பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி அவள் அருளுக்குப் பாத்திரமாவது வழக்கம். ஆடி வெள்ளிக் கிழமைகளில் இந்த புற்று மாரியம்மன் விசேஷ அலங்காரங்களில் காட்சியளித்து பக்தர்களை மகிழ்வித்து அருள்புரிகிறாள். முதல் வெள்ளிக்கிழமையில் சந்தனகாப்பு அலங்காரம். இரண்டாம் வெள்ளியன்று மகாலட்சுமியாக அலங்காரம். மூன்றாம் வெள்ளியன்று சரஸ்வதி சொரூபமாக. நான்காம் வெள்ளியன்று துர்க்கை அலங்காரம். ஐந்தாம் வெள்ளியன்று மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி வடிவாக அலங்காரம். இவ்விதமாக பல்வேறு பெண் தெய்வங்களின் வடிவாக அலங்கரிக்கப்பட்ட புற்று மாரியம்மனுக்கு தீபாராதனையும், பூஜைகளும் அமர்க்களப்படும்.

ஒவ்வொரு வெள்ளியன்றும் கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெறும். பிள்ளைப்பேறு, வேலைவாய்ப்பு, திருமணம், ஜாதக தோஷ நிவர்த்தி, செய்தொழில் மேன்மை, துர்சக்திகளை முறியடித்தல் போன்ற கோரிக்கைகளுக்காகவும் உடலை வருத்தும் பிணிகளை விரட்டவும் வழிபடுவோர்க்கு குறுகிய காலத்தில் பலனளிக்கிறாள் அரகண்டநல்லூர் புற்று மாரியம்மன். அம்மனை வணங்கி அருள் பெறுவோம் வாருங்கள்.

Views: - 0

0

0