ஆசியாவில் உயர்ந்த அருள்மிகு புலியகுளம் விநாயகர் கோயில் பாகம்-1

25 August 2020, 5:00 am
Quick Share

வினைகளை தீர்க்கும் விநாயகரின் வடிவங்களில் பிரசித்திபெற்ற புலியகுளம் விநாயகர் கோவில் 500 வருட பாரம்பரியம்கொண்டது. இங்கு சங்கட சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை முதல் நாளில் சுமார் 3 டன் எடை கொண்ட பல வகை பழங்களால் விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. சித்திரைக்கனி யன்று 5 டன் எடையுள்ள காய் கனிகளால் செய்யப்படுகிற அலங்காரம் மிகவும் சிறப்புக்குரியதாகும்.

அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை முடிந்து அலங்காரம் கலைத்த பின்பு பயன்படுத்திய காய்கனிகளை பக்தர்களுக்கு வினியோகிக்க பக்தர்கள் அதை பரவசமாக பெற்றுக்கொள்வது சிறப்புற நடைபெறும்.
அதேபோல விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவதுடன் 3 டன் எடை கொண்ட பல வகை மலர்களாலான மாலையை விநாயகருக்கு அணிவித்து விநாயகர் ராஜா அலங்காரத்தில் காட்சி தருவார்.

விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிள்ளையாரை தரிசித்து செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று ராஜா அலங்காரத்தில் கம்பீரமாக அருள்தரும் விநாயகரை நீண்ட தூரத்திலிருந்து கூட வழிபடுகின்ற அமைப்பு இந்த கோவிலின் தனிச்சிறப்பு. ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. விநாயகர் துதிக்கையில் அமிர்த கலசம், இடது காலில் மகாபத்மம் என காட்சி தரும் அழகே தனி.

இந்த கோயில் தினசரி காலை ஐந்து முப்பது மணி முதல் மதியம்ஒரு மணி வரையிலும் மாலை நாலு மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இந்த கோவிலின் தலவிருட்சம் அரச மரமாகும். முந்தி விநாயகருக்கு முழுவதும் கற்களால் ஆன 5 நிலை கோபுரம் ,முன் மண்டபம் அமைக்கும் திருப்பணி பக்தர்களின் பங்களிப்புடன் நடந்து வருகிறது. சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவாகிய விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி கல்வி பயணத்தை துவக்குவது வழக்கம்.

ராகு கேது தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் நிவர்த்திக்காக நவகோள்கள் கோயில் கொண்ட தலங்களுக்குச் சென்று வழிபடுவதை விட கணங்களுக்கு எல்லாம் நாயகனாக விளங்கும் இந்த முந்தி விநாயகரைத் தொழுது போற்றினால் அவை நிவர்த்தி ஆகின்றன என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. விநாயகரின் திருவருளால் தன்னை நாடி வந்த பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது. தடைபெற்ற திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார். இதனால் பக்தர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது .

முந்தி விநாயகரை வணங்கினால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும். 16 வகை பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் அபிஷேகம் மற்றும் அர்ஜனை செய்கின்றனர். சித்திரை முதல் நாள், தை முதல் நாள், ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, சுக்ல சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது.

அந்த தினங்களில் அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால் ,தயிர், இளநீர் ,சந்தனம் பன்னீர் ஆகிய 11 திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. விநாயகர் மகா மண்டபத்தில் விநாயகர் பீடத்தில் மூஞ்சூறு நாகருடன் மரத்தடி விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் அலங்காரத்தில் காட்சி தருகிறார். விநாயகர் ஆசியாவிலேயே உயரமாக அமைந்ததை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Views: - 39

0

0