குழந்தை வரம் தந்திடும் முக்கூடல் முத்துமாலை அம்மன்

20 September 2020, 5:00 am
Quick Share

முக்கூடல் அருள்மிகு முத்துமாலையம்மன், தாமிரபரணி தீரத்தில் மிகவும் விசேஷமாகப் போற்றப்படக்கூடிய பெண் தெய்வம். தேவி பாகவதம் எனும் நூல் தரும் விளக்கத்துக்கு ஏற்ப, முக்கூடல் முத்துமாரியம்மனை லட்சுமி அம்சமாகவே போற்றுகிறார்கள் பக்தர்கள். ஒரு முறை முப்பெரும் தேவியருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மூவரும் தாங்கள் அருள்பாலிக்கும் இடங்களைத் தனித் தனியே பிரித்துக்கொண்டார்களாம்.

அப்போது லட்சுமிதேவியிடம் ‘நீ தென் பாகத்தில் நதியாக ஓடி, அதில் குளிப்பவர்களின் பாவத்தைப் போக்கி, அங்கேயே அமர்ந்து அருள்வாய்’ என மற்ற இருவரும் கூறிவிட்டார்களாம்.அதன்படியே தாமிரபரணியாக உருவெடுத்து பாயத் தொடங்கிய அலைமகள், முக்கூடலில் முத்து மாலையம்மனாக அருள் பாலிக்கிறாள் என்கிறார்கள் பக்தர்கள். செல்வம், ஆற்றல், கல்வி ஆகிய மூன்றையும் அருளும் அன்னை முக்கூடல் முத்து மாலையம்மன் வணங்கும் பக்தர்களுக்கு வரம் தருவதில் விசேஷ சக்தி வாய்ந்தவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள முத்துமாலையம்மன் திருமேனி மண்ணில் புதைந்துபோனதாம். அந்தக் கால கட்டத்தில், முக்கூடல் மக்கள் ஆனி மாதம் தோறும் குரங்கணி எனும் ஊரிலுள்ள முத்துமாலையம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்களாம். குரங்கணிக்குச் செல்ல இயலாத அன்பர்கள், முக்கூடல் ஆற்றங் கரையில் சிறிய குடில் ஒன்றை அமைத்து, அம்மனை வழிபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஒருநாள், சலவைத் தொழிலாளி ஒருவர், வேலை முடிந்ததும் சலவைத் தாழியை இந்தக் குடிலுக்கு அருகில் கவிழ்த்துவைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றார். மறுநாள், என்ன முயற்சி செய்தும் அவரால் அந்தத் தாழியை வைத்த இடத்திலிருந்து எடுக்க முடியவில்லை. ஊரார் கவனத்துக்குச் செய்தி போனது. ஒட்டுமொத்த ஊரும் வந்து தாழியை அசைக்க முயன்றும் முடியவில்லை. கோயில் பூசாரியாலும் நகர்த்த முடியாமல் போனது.

அன்று இரவு பூசாரியின் கனவில் தோன்றிய முத்துமாலையம்மன், தாழியை அந்த இடத்திலேயே வைத்து வழிபடும்படி கட்டளையிட்டாள். வேறொரு திருவாக்கும் கிடைத்தது. அதன்படி அருகிலுள்ள அரிய நாயகிபுரம் எனும் ஊருக்கு மேற்கே, அம்மன் கூறிய இடத்தில் கருடன் வட்டமிட்டது. அந்த இடத்தில் லட்சுமியின் அவதாரமான முத்துமாலை அம்மனின் சிலை கிடைத்தது. அதை நீராட்டி மாலை அணிவித்து, மேளதாளத்துடன் முக்கூடல் கோயிலுக்குக் கொண்டு வந்து தாழி அருகிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். அன்று முதல் ஊர் செழித்தது.

ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசிச் செவ்வாய் அன்று இந்தக் கோயிலின் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். முத்துமாலை அம்மனுக்குத் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும். ஆனித் திருவிழாவின்போது வெள்ளி, தங்கம் அல்லது மரத் தாலான கை, கால் முதலான உருவங்களைச் செய்து சமர்ப்பிக் கிறார்கள். இதனால் தேக பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதிகம்.

தொடர்ந்து 41 நாள்கள், அருகில் பாயும் தாமிரபரணி நதியில் நீராடி, கோயிலை வலம் வந்து அன்னையை வழிபட்டால், கடன் பிரச்னைகள் நீங்கும்; இழந்த பொன்னும் பொருளும் மீண்டும் வந்துசேரும்; வீட்டில் பொருளாதாரம் செழிக்கும். திருநெல்வேலி- திருச்செந்தூர் பாதையில், செய்துங்க நல்லூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது முக்கூடல்.
செய்துங்க நல்லூரிலிருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. இந்தக் கோயில் காலை 7 முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் முத்துமாலையம்மனை தரிசனம் செய்து முத்தான பலன்கள் பெறலாம்.

Views: - 0 View

0

0