இலங்கையில் இராவணனின் நீர் தொட்டி பற்றி தெரியுமா..?

24 September 2020, 5:00 am
Quick Share

இலங்கை இராவணனின் நீர் தொட்டி சிகிரியாவின் உச்சியில் உள்ளது. இராவணன் இந்த நீர்த்தொட்டியை குளிப்பதற்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 90 அடி நீளம், 68 அடி அகலம், 7 அடி ஆழம் கொண்ட இந்த நீர்த்தொட்டி தான் உலகிலுள்ள பழமையான நீர்த் தொட்டிகளில் மிகப் பெரியது. அக்காலத்து சிற்பிகள் இந்த நீர்த் தொட்டியை ஏற்படுத்த சுமார் 3,500 டன் பாறையை குடைந்து எடுத்துள்ளனர். இது எப்படி சாத்தியம் ஆனது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்று வரை யாராலும் கூற இயலவில்லை. குடைந்து எடுத்த பாறைகள் எவ்வாறு கீழே கொண்டுவரப்பட்டன.

அவை எங்கு கொண்டு செல்லபட்டன என்பதும் தெரியவில்லை. சிகிரியாவை சுற்றி பல மைல் தொலைவிற்கு குடைந்து எடுத்த பாறைகளோ அல்லது அந்த பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் அல்லது கட்டிடம் எதுவும் இல்லை. மேலும், இந்த நீர்த் தொட்டியில் உள்ள நீரின் அளவு கடும் கோடை காலத்தில் முழுவதும் வற்றிவிடாமலும், மழை காலத்தில் நிரம்பி வழியாமலும் இருப்பது ஆச்சரியத்தையே அளிக்கிறது. சிகிரியாவின் உச்சியில் உள்ள மற்றுமொரு நீர் தொட்டி கோடை காலத்தில் முழுவதும் வற்றி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இராவணனின் நீர் தொட்டியின் ஒருபுறம் காணப்படும் படிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த படிகள் மேடை போன்ற பகுதியை அடைய ஏற்படுத்தபட்டுள்ளன. இந்த படிகள் நீர் தொட்டியின் உட்புறம் இருந்து மேடைவரை செல்கின்றன.
எதற்காக இத்தகு அமைப்பை அக்கால சிற்பிகள் ஏற்படுத்தினர் என்ற வினா எழத்தான் செய்கிறது. ஆய்வாளர்கள் சிலரின் கருத்துப்படி, ஒருவர் இந்த மேடையின் மீது அமர்ந்து கொண்டால், சிகிரியாவை சுற்றியுள்ள பல மைல் தொலைவுவரை தெளிவாக காண முடியும். எதிரிகள் எவரேனும் சிகிரியாவை நோக்கி முன்னேறினால், மேடையின் மீது உள்ள நபரின் பார்வையிலிருந்து தப்புவது கடினம்.

அத்தகு தருணங்களில் நீர் தொட்டியிலுள்ள நீரை திறந்து விடுவதன் மூலம், சிகிரியாவின் அடிவாரத்திலுள்ள நீர் பூங்காவிலுள்ள காவலர்களுக்கு எதிரிகளின் வரவை முன்கூட்டியே தெரிவித்துவிட முடியும். நீர் பூங்காவிலுள்ள காவலர்கள் அங்குள்ள தொட்டிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடச்செய்வதன் மூலம் எதிரிகள் சிகிரியாவின் எல்லைக்குள் நுழைவதை தடுக்க இயலும்.

பண்டைய காலத்தில் வெறும் உளிகளை கொண்டே சிற்பிகள் திருக்கோயில்கள் மற்றும் கட்டிடங்களை அமைத்தனர்
என்று கூறுபவர்களுக்கு சிகிரியா சிம்ம சொப்பனமாக உள்ளது. பண்டைய காலத்தில் இப்போது உள்ளதை விட உயரிய தொழில்நுட்பம் பொருந்திய கட்டிடக்கலை இருந்துள்ளது என்பதற்கு சிகிரியாவில் காணப்படும் அமைப்புகள் பல சிறந்த உதாரணமாக திகழ்கின்றன.