தினம் ஒரு திருக்கோவில் : குடும்பநலம் காக்கும் குலசை முத்தாரம்மன்!!

27 August 2020, 5:00 am
Quick Share

குடும்பநலம் காக்கும் குலசை முத்தாரம்மன் அம்மன் கோவில்கள் என்றாலே சக்தி பெண்களுக்கு பெருகும். அதுவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் பக்திப்பெருக்கே தனி. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் 18 கிலோமீட்டர் தொலைவில் திருச்செந்தூர் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் குலசேகரன்பட்டினம் அமைந்துள்ளது. இது முன்பு பாண்டிய மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய ஊர் ஆகும்.

இவ்வூரின் நடுநாயகமாக அருள்மிகு அன்னை முத்தாரம்மன் கோயில் உள்ளது. முத்துக்களை ஆரமாக அணிந்தவள் என்பதாலும் கடலில் தோன்றும் வெம்மையான முத்துக்களை ஆற வைப்பவள் என்பதாலும் முத்தாரம்மன் என்ற திருப்பெயர் ஏற்பட்டுள்ளது. தட்சயக்ஞத்தியின் பின் புவனேஸ்வரி பூவுலகம் வந்து பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்தாள். அம்பிகையின் தவ உறுதியைக் கண்டு பரமன் வந்தார். உனக்கு என்ன வேண்டும் என்று அன்னையிடம் இறைவன் கேட்டார். புவனத்துயிர்கள் என்னை மறவாது இருக்க அருள் புரியவேண்டும் என்றாள் அன்னை.

அவ்வாறே ஆகுக என்று கூறிய பரமன் ஞானமுத்து ஒன்றை அன்னைக்கு அருளினான். அம்முத்து வெப்பம் மிகுதியாக இருந்தது. அந்த வெப்பத்தை குறைத்துதருள அம்பிகை வேண்டினாள். அந்த முத்தின் வெம்மையை குறைத்து அன்னைக்கு அருளினான் பரமன். அதனால் முத்தாரம்மன் என்று திருப்பெயர் ஏற்பட்டது. அருள்மிகு முத்தாரம்மனும் சுவாமி ஞான முத்தீஸ்வரரும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி அமர்ந்து இருக்கின்றனர். இது பிற காளி கோயில்கள் இல்லாத காட்சியாகும். திருக்கோவிலை கட்டிய அய்யாதுரை கவிராயர் ஜீவ சமாதி குலசை மூவர் ஜீவசமாதி கோவிலின் கிழக்குப் பக்கம் கவிராயர் முடுக்கு பகுதியில் உள்ளது.

பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலை கட்டினார்கள் என்பதை நிரூபிப்பதற்காக இந்த ஜீவ சமாதியை சிலர் இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது சம்பந்தமான வழக்கு நடந்து வருகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த கோவிலின் தல விருட்சமாக வேம்பு உள்ளது. இங்கு கோயில் தினசரி காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை நாலு மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே இங்கும் பெண்ணாதிக்கம் நிறைந்த ஒரு தலமாக கருதப்படுகிறது.

இத்திருக்கோவிலில் தினமும் மூன்று கால பூஜையும் ஆடி மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் கொடைப் விழாவும் புரட்டாசி மாசம் நவராத்திரி விழாவும் நடைபெறுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசராவுக்கு பிறகு, அதிகப்படியாக குலசையில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா விழாவுக்கு திரள்கிறார்கள்.

விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் தனித்துவம். அதிலும் காளி வேடம் தரிப்போர்கள் 48 நாட்கள் கடுமையான விரதம் இருப்பது விசேஷம்.மனநல பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை பேறு தடை அம்மை நோய் கை கால் ஊனம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கவல்ல அம்பிகை முத்தாரம்மன் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். குலசை முத்தாரம்மன் கும்பிட்டு பக்தி பூர்வமான பலன் பெறுவோம்.

Views: - 33

0

0