குற்றம் போக்கும் குன்றக்குடி முருகன்

21 November 2020, 5:05 am
Quick Share

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. முன்னொரு காலத்தில் அரசவனம் என்று போற்றப்பட்ட இந்தத் தலம், பின்னாளில் குன்றக்குடி என்று அழைக்கப்படுகிறது. ஆறுமுகமும் பனிரெண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
.
மயிலை கந்தன், செட்டி முருகன், குன்றை முருகன் என பல திருநாமங்களுடன் திகழ்கிறார். சூரபத்மன் தவறாகச் சொல்லிக் கொடுக்க, அதனால் மயில் சாபம் பெற்றது. பிறகு அந்த மயில், முருகப்பெருமானின் அருளைப் பெற இந்தத் தலத்தில் தவமிருந்தது. இந்த குன்றக்குடிக்கு மயூரகிரி என்றும் திருநாமம் உண்டு. ஆமாம்…கிரி என்றால் மலை. மயூரி என்றால் மயில்.

சாப விமோசனத்துக்காக, இங்கெ மயில் மலையாக நின்று தவமிருந்தது. இந்த மலை ஒரு மயிலைப் போல் அமைந்திருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம். மயிலுக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார் முருகப்பெருமான். பின்னர் மயிலின் வேண்டு கோளுக்கிணங்க, இந்தத் தலத்திலேயே இருந்து அருளாட்சி செய்து வருகிறார் முருகப்பெருமான் என்கிறது ஸ்தல புராணம்.

அற்புதமான திருத்தலம் குன்றக்குடி. காரைக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களில் உள்ள மக்கள், மனதில் எது நினைத்தாலும் இந்தத் தலத்துக்கு பாதயாத்திரையாக வருவதை வழக்கமாக் கொண்டுள்ளனர். அதேபோல், இந்த மாவட்டத்தின் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், பழநி பாத யாத்திரை மேற்கொள்ளும் போது, குன்றக்குடி முருகன் கோயில் வாசலில், வேண்டிக்கொண்டு, சிதறுகாய் உடைத்து பிரார்த்தித்துக்கொண்டு யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

அதேபோல், பழநி பாதயாத்திரை முடிந்ததும் வரும் வழியில் குன்றக்குடியில் இறங்கி, முருகப் பெருமானை தரிசித்துவிட்டு, வீடுகளுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். வரம் தரும் மயில்மலை எங்கள் குன்றக்குடி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். அருணகிரிநாதர் இந்த முருகக் கடவுளை திருப்புகழ் பாடியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளும் இந்தத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார்.

சூரியன், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், இந்திரன், மன்மதன் முதலானோர் இங்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். சூரனை வதம் செய்த சூரசம்ஹார விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குன்றக்குடி முருகனை வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம். அதேபோல, பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

கந்த சஷ்டியில், மயிலே மலையெனக் கொண்டு காட்சி தரும் மலையில் குடியிருக்கும் சண்முகநாதரை வேண்டுவோம். குறைகளையெல்லாம் களைந்து அருளுவான். வாழ்வாங்கு வாழச் செய்வான் குன்றக்குடி முருகன்.

Views: - 0

0

0