பிறவித்தளை நீக்கும் தலைஞாயிறு கோவில்

23 November 2020, 5:04 am
Quick Share


.நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறுவில் உள்ளது குற்றம்பொறுத்த நாதர் திருக்கோவில். இது மறுபிறவி நீக்கும் மகாலயமாக விளங்குகிறது. விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான்.

இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் தலைஞாயிறு என வழங்கப்படுகிறது.  இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார்.

அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது. 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் கருப்பறியலூர் என வழங்கப்படுகிறது. அனுமன் தோஷம் நீங்கிய தலம்.

ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா என்றார்.  உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.

  ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது.  சிவனை குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என ராமர், அனுமனுக்கு யோசனை கூறினார்.

அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும், என அருள்பாலித்தார்.  அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது திருக்குரக்கா என வழங்கப்படுகிறது.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

Views: - 50

0

0