தினம் ஒரு திருக்கோவில் : முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர்..!

10 August 2020, 8:08 pm
Quick Share

கோவை மாநகரில் இருந்து மேற்கில் வெள்ளியங்கிரி சிறுவாணி சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அழகாக அமைந்துள்ளது பேரூர். இந்த ஊரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் திருக்கோயில் கோவை மக்களின் மனதில் அசைக்கமுடியாத இடம் பிடித்து விட்டது.

நகர்புற வாடை மாறி கிராமிய தென்றல் வீசும் பசுமையான இந்த ஊரில் பட்டீஸ்வரர் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சி மாநதி என்னும் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள இந்த கோயிலை முதலாம் நூற்றாண்டில் ஆண்ட கரிகால் சோழன் திருப்பணி செய்துள்ளான்.

இந்த ஆலயத்திற்கு பதினோராம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களும் பிறகு விஜயநகர மன்னர்களும் மண்டபங்கள் கட்டி திருமணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. கிழக்கு நோக்கி எழுந்துள்ள இந்த ஆலயத்தின் முன்பு தென்கிழக்கில் ஒரு புளியமரம் உள்ளது.

பிரபா புளி என்பது இதன் தனிச்சிறப்பு. அதன் கொட்டைகள் செடியாக முளைக்காது. இங்கு சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவது இல்லை என்பது மற்றொரு சிறப்பு. அதேபோல கோயிலுக்கு வெளியே வடக்கில் சிறிது தூரம் நடந்தால் பட்டி விநாயகர் பாசத்தோடு நம்மை அழைப்பார். நொய்யல் ஆற்றங்கரை நதிக்கரையில் அவரைத் தரிசிக்கலாம்.

அதன் பிறகு வட கைலாயம் எனும் சிறிய சிவன் கோயில் வரும். அதனருகே உள்ள உயரமான பனைமரம் பல ஆண்டுகளாக உயிர்த்து வருவதால் அதை இறவாப்பனை என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மறு பிறவி இன்றி இறவாத புகழ் உடல் பெறுவர் என்பது நம்பிக்கை.

எனவே, இத்தலம் முக்தித்தலமாக போற்றப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி வழிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலவிருட்சம் பன்னீர் மரமாக கருதப்பட்டு கோவிலின் உள்ளே மூலவருக்கு பின்புறம் முதல் பிரகாரத்தில் உள்ளது. ராஜகோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே நுழைந்தால் நமக்கு முதலில் தரிசனத்திற்கு கிடைப்பது கொடிமரம்.

அதைத் தொடர்ந்து ஒரு கல் தொட்டிக்குள் நந்திதேவர் இருக்கிறார். அருகே கலை நுணுக்கங்களுடன் கூடிய தெற்கு நோக்கிய நடராஜர் மண்டபம் உள்ளது. கனகசபை எனப்படும் மண்டபத்தின் இருபுறமும் உள்ள எட்டு தூண்களிலும் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த நடன கணபதி ஆறுமுகப்பெருமாள் ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர்.

மேலும், ஊர்த்தவ தாண்டவ கோலத்தில் சிவபெருமான், திருவாலங்காட்டு நடன காளி, அக்னி வீரபத்திரர் ,அகோர வீரபத்திரர்; பிச்சாண்டவர், யானைத் தோல் போர்த்திய சிவபெருமான் போன்ற சிந்தை கவரும் சிற்பங்கள் உள்ளத்தை தொடுகின்றன. அண்ணாந்து பார்த்தால் கூரையில் உள்ள தாமரை, ரதி- மன்மதன் போன்ற ஓவியங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய அற்புதமாக உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள நடராஜரின் திருவுருவம் அற்புதமான நல்ல ஆனந்தம் தரும்.

எல்லா கோவிலிலும் ஆடும் நிலையிலிலுள்ள நடராஜர் முகபாவம் இங்கே மட்டும் ஆட்டம் முடியப்போகும் நிலையில் உள்ளது. குளிர்ந்த பார்வையும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் கொண்ட நடராஜரின் மேடான கன்னமும் சடையும் தரையை நோக்கி தாழ்ந்துள்ள கால்களும் சிற்பக்கலையின் சிகரங்கள். விஷ்ணு ,பிரம்மா ஆகிய தெய்வங்களுக்கும் சுந்தரருக்கும் நடராஜர் தாண்டவ காட்சி கொடுத்துள்ளார்.

இதனை மேலைச்சிதம்பரம் என்கின்றனர். எனவே இங்கு திருவாதிரைத் திருநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தெய்வபசுவான காமதேனு இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவம் செய்தது. அப்போது அதன் கன்று குட்டியான” பட்டி” அருகில் விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென்று பட்டியின் ஒரு கால் குழம்பு அருகிலிருந்த புற்றின் உள்ளே அழுந்திக்கொண்டது.

எவ்வளவோ முயன்றும் காலை வெளியே எடுக்கமுடியவில்லை; இதனால் பட்டி தன் கொம்பால் முட்டியது. அப்போது திடீரென்று புற்றில் இருந்து ரத்தம் கசிந்து வெளிவந்தது புற்றுக்குள் சிவன் லிங்கமாக இருப்பது தெரிந்தது.அப்போது தியான நிலையில் இருந்த காமதேனு கண் விழித்துப் பார்த்தது. தன் கன்றின் செயலுக்காக வருந்தியது. இறைவனின் வழங்கி கதறி அழுதது. அதன் அழுகை தொடர்ந்ததால் மனமிரங்கி அப்போது காம தேவனுக்கு இறைவன் காட்சி கொடுத்தார்.

“குழந்தைகள் செய்யும் தவறை பெரிதாகவ எடுத்துக்கொள்ளக்கூடாது .அன்பின் மிகுதியால் எனது திருமேனியில் கொம் படியையும் குளம்படியையும் தழும்பாக ஏற்றுக்கொண்டோம். அதனால், இவ்வூர் பட்டிபுரி என்றும் யாம் பட்டீஸ்வரன் என்றும் அழைக்க பெறுவோம். இப்படி ஒரு புராணச் செய்தி இன்னும் இருக்கிறது. இன்னும் பட்டீஸ்வரர் திருமேனிகள் தழும்புகள் உள்ளன. பழம்பெருமை வாய்ந்த பட்டீஸ்வரரை வணங்கிவிட்டு முதல் பிரகாரம் வலம் வரும்போது நால்வர் உட்பட 63நாயன்மார்கள் சிவரூபங்கள், தெற்கு மண்டபத்தில் உள்ளன.

மூலவரின் விமானத்தின் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். பின்புறம் லிங்கோத்பவர், வடக்கு நோக்கி பிரமமதேவர் காட்சி தருகின்றனர். அருகே துர்க்கை அம்மனும் அருள்புரிகின்றனர். கோமுகமருகே சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தின் மேற்குப் புறத்தில் கணபதியும் தொடர்ந்து வரிசையாக சிவலிங்கங்களும் உள்ளன.

அதில் சகஸ்ரநாம லிங்கம் சிறப்பு வாய்ந்தது. வடக்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார் முருகப்பெருமான். எல்லா கோயிலின் மேற்கு நோக்கி இருக்கும் கால பைரவர் இங்கு மட்டும் தெற்கு நோக்கி ஞானபைரவர் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை என்பது தனிச்சிறப்பு.

முக்தி தலம் என்பதால் இவ்வாறு இருப்பதாக கூறுகிறார்கள். முதல் பிரகாரத்தை சுற்றிவிட்டு வந்தவுடன் வெளிப் பிரகாரத்தை வலம் வருகிறோம். கன்னிமூல கணபதி கிழக்கு நோக்கி தனி சன்னதியில் காட்சி தருகிறார். அங்கு மேற்கு நோக்கிய தனிக்கோவிலில் பால தண்டாயுதபாணி சுவாமி பழனியை போலவே அழகு கொஞ்சம் திருக்கோலத்தில் நின்று அருள்பாலிக்கிறார்.

அவருக்கு வலப்புறம் தந்தையான விசுவநாதரும் இடதுபுறம் அன்னை விசாலாட்சியும் காட்சி தருகின்றனர். அம்மையப்பர் உடன் காட்சிதரும் முருகப்பெருமான் கோரக்க சித்தரால் வழிபடப்பட்டவர். அருணகிரிநாதரால் பாடப்பெற்றது இங்கே முருகனுக்கு தனிச்சிறப்பு. முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

சுவாமிக்கு இடப்புறம் தனிக்கோயிலில் அம்மன் மரகதாம்பிகை எனும் பச்சைநாயகி மணக்கோலத்தில் திருவருள் செய்கிறார். அம்பாள் சந்நிதி நுழைவு வாசலில் வலதுபுறம் மனோன்மணி அம்மையும் இடது புறம் வரதராஜ பெருமாளும் மரத்திலான ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர். சிவபெருமான் சுந்தரரிடம் நடத்திய “நாற்று நடும் திருவிளையாடல்” இங்கு ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

முத்தி தரும் இந்த ஆலயம் நல்ல வாழ்க்கைக்கான சக்தியையும் தரும். வாருங்கள் வணங்குவோம்…!

Views: - 6

0

0