தீப ஆராதனை : தத்துவ விளக்கம்

11 December 2019, 10:11 am
dep-updatenews360
Quick Share

இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார். இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம” என்று போற்றுகிறார்.

மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே’ என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே’ என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.

கோவில்களில் செய்யப்படும் தீபாராதனைகளைப் பற்றியும், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. தீபாராதனை என்பது வெறும் சடங்காக மட்டுமின்றி, உலகின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் காட்டும் தத்துவ விளக்கமாகவும் அமைந்துள்ளது.

இனி கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் அதன் தத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தங்களுக்கு முன்பு திரையிடப்பட்டிருக்கிறது. திரைக்கு உள்ளே இருந்து பூஜையை குருக்கள் ஆரம்பிக்கிறார்.

முதலில் மணியோசை கேட்கிறது. எல்லையில்லா வெற்றிடத்தில் முதலில் ஒலியே பிறக்கிறது. ஒலியில் இருந்து ஒளி பிறப்பது ஒரு தீபத்தின் மூலம் காட்டப்படுகிறது.ஒலியில் இருந்து இறைவன் அருளால் பல நிலைகளில் உள்ள ஜீவன் பிறப்பதை அடுக்கு ஆரத்தி உணர்த்துகிறது. இப்போது திரை நீக்கப்பட்டு அடுக்கு ஆரத்தியைப் பார்க்கிறோம்.

அண்டவெளியில் புலப்படாதிருந்த உலகம் திரையை விலக்கிக்கொண்டு நமக்குத் தெரிகிறது. இறைவன் உயிரில் கலந்து உருவமாகப் புலப்படுவதும் திரை விலகிய பிறகு இறை வடிவத்தைக் காண்பதும், அதன் முன்னே இருக்கும் அடுக்கு ஆரத்தியும் குறிப்பிடுகின்றன.

அடுக்கு ஆரத்தியில் தீபங்கள் பல தட்டுகளில் இருந்தாலும், அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தைக் குறிப்பிடுகின்றன.பிறகு ஐந்து தட்டுகள் காட்டப்படுகின்றன. இவை சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்சபூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. பிறகு ஐந்து பூதங்களும் சேர்ந்து பிரபஞ்ச வடிவமாக விளங்கும் கும்பாரத்தி காட்டப்படுகிறது.