மார்கழி பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்..!

17 December 2019, 9:03 am
temple updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தமிழ் மாதங்களில் தனுர் மாதம் என்றழைக்கப்படுவது மார்கழி மாதத்தில் அதிகாலையில், எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம். சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, வண்ண வண்ணக் கோலமிட்டு, மலர்களால் அலங்காரம் செய்வர். விஷ்ணுவிற்குரிய வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளும், அனுமன் அவதாரமும், மகாபாரத யுத்தம் நடந்து கீதை பிறந்ததும் இதே மாதத்தில்தான்.

பல்வேறு சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்ற மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. போக சீனிவாசமூர்த்தி அருகில் ஸ்ரீகிருஷ்ணரை வைத்து, ஜீயர் சுவாமிகள் மற்றும் சீடர்கள் திருப்பாவை பாடுகின்றனர். கொட்டும் பனியையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திரண்டிருந்தனர். சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.