தினம் ஒரு திருக்கோவில் : புதிய சக்தி தரும் பழைய சீவரம் ஸ்ரீல‌க்ஷ்மி நரசிம்மர்!!

2 September 2020, 7:30 pm
sri lakshi narasimmar - updatenews360
Quick Share

கடவுள் மிகவும் வியப்பான விசயம். ஆளுமைமிகுந்த மகத்தான சக்தி. மனித இனத்தின் இறைதேடலை வரையறுக்க இயலாது. மனித இனத்தின் நாகரீகம் தோன்றியது நதிக்கரைகளில் தான் என்பது வரலாறு.

பண்டைய நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே அமைந்தன கோவில்கள். அது போல செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றின் கரையில் அமந்துள்ளது பழைய சீவரம் கிராமம்.

புராண பெயர்ப்படி ”ஸ்ரீபுரம்”. ஸ்ரீபுரம் காலப்போக்கில் மருவி சீவரம் ஆனதாக ஒரு கருத்து உண்டு. மிகவும் பழமையான ஊர் ஆதலால் பழைய சீவரம். பாலாற்றின் கரையிலே ஒரு சிறு குன்று; அந்த குன்றின் மேலே சற்று தூரத்தில் ஒரு அழகிய ஆலயம்.

ஆலயத்தின் மூல மூர்த்தி “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள்”.

இந்த ஆலயம் அமைந்திருக்கும் குன்றின் புராண பெயர் ”பத்மகிரி”யாம். நைமிசாரண்யம் என்னும் இடத்தில் பல முனிவர்களும் ரிஷிகளும் கூடி இருக்கும் வேளையிலே ”விஷ்ணுசித்தர்” என்னும் முனிவர் ஒரு கேள்வி எழுப்புகிறார்.

ஸ்ரீமன் நாராயணனை ”அர்சை” ரூபத்தில் தொழுது முழுமையான பலன் பெற ஏதேனும் ஒரு தலம் உள்ளதா என்பது கேள்வி.

இதற்கு பதிலளிக்கும் ”மரீச” முனிவர் அவ்வாறு ஒரு தலம் உள்ளது;அங்கே தொழுபவர்களுக்கு பெருமாள் முழுமையான பலனை தந்த வரலாறும் உள்ளது என சொல்கிறார். அந்த தலம் தான் இந்த பழைய சீவரம்.

நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹரை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த அத்திரி முனிவருக்கும் அவர் மனைவி அனுசுயைக்கும் நெடு நாட்கள் ஆகியும் பெருமான் காட்சி கொடுக்க வில்லை. அதனால் அவர்கள் தங்களது தவத்தை அதிகரித்த வேளயிலே பெருமான் அவர்களுக்கு அசரீரியாக ஒலித்து ஒரு செய்தி சொல்கின்றான்.

தென்திசை நோக்கி சென்று பாலாற்றின் கரையிலே அமைந்துள்ள பத்மகிரியில் கிழக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தால் தான் காட்சி தருவதாக சொன்னதே அந்தச்செய்தி.

அதன்படியே இங்கே வந்து தவம் செய்த அத்திரி முனிவரின் தவத்தை மெச்சிய பெருமாள் ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ம ரூபத்தில் மேற்கு நோக்கியவாறு அத்திரி முனிவருக்கு காட்சி அளிக்கிறார்.

அப்படியே அத்திரி முனிவரின் வேண்டுகோளின் படி அங்கேயே ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ம ரூபத்தில் தங்கிவிடுகிறார் என்கிறது பிரம்மாண்ட புராணம்.

ஸ்ரீ ல‌க்ஷ்மிநரசிம்ம பெருமாள் சுமார் 6 அடியில் ஸ்ரீ மஹாலட்சுமியை தன் மடியிலே இருத்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பொங்க காட்சி அளிக்கிறார். வெகு அழகாக நேர்தியாக பராமரிக்கப்படும் திருக்கோவிலில் தனியே அஹோபில வல்லி தாயார் சந்நிதியும் உண்டு.

இவ்வாலயத்தில் இருந்து சற்று மேலே சுமார் 100-150 படிகள் ஏறி சென்றால் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் இருந்து சற்று தொலைவில் மிகவும் பாழடைந்த நிலையில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இந்த பத்மகிரி என்னும் குன்று மூலிகைகள் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த பழைய சீவரம் தலத்திற்கு மற்றுமோர் சிறப்பும் உண்டு.

”பேரருளாளன்” என போற்றப்படும் காஞ்சி வரதராஜ பெருமாள் ஆதியில் அத்தி மரத்தால் ஆன மூலவராக அருள்பாலித்து வந்தார். பின்பு கால ஓட்டத்திலோ அல்லது அன்னியர் படையெடுப்பின் போதோ அந்த அத்தி வரதர் சிலை பின்னம் ஆகியுள்ளது.

வேறு சிலை நிறுவ நினைத்த பெரியோர்கள் இந்த பத்மகிரியில் இருந்து தான் தற்போதுள்ள வரதராஜர் சிலையை செய்து காஞ்சி எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றார்கள்.

இந்த மண்டபத்தில் தான் வரதராஜர் தங்குவார். பழைய சீவரத்தில் இருந்து வந்த வரலாற்றை நினைவு கூறும் வகையிலே தான் காஞ்சி வரதர் ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வோர் வருடமும் மாட்டு பொங்கல் தினத்தன்று “பார் வேட்டை” அல்லது பரிவேட்டைக்கு இந்த ஊரில் வந்து தங்குவார். பார் வேட்டை என்பது ”துஷ்ட நிக்ரஹம்” எனப்படும் தீமை ஒழிப்பை நினைவூட்டுவதாகும்.

இதயம் கவரும் இந்த தெய்வத்தை இனிதே வணங்குவோம்.

Views: - 10

0

0