உயர்வு தரும் உலகளந்த பெருமாள் கோவில்

15 August 2020, 5:00 am
Quick Share

நாம் எத்தனையோ பெருமாள் திருக்கோயில்களை தரிசித்து இருப்போம். ஆனால் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பெருமாளைப் போல பிரமாண்டமான தரிசனம் பெற்று இருக்க மாட்டோம். அவ்வளவு உயரம், ஆண்டவனை அண்ணாந்து பார்த்து தான் வணங்க வேண்டும், அவ்வளவு பிரமாண்டம்.
கி-மு 500 ஆம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது.

கிருஷ்ணருடைய பிரதானமான கோயில்களில் முதலாவதான தலம் உலகளந்த பெருமாள் கோயில் ஆகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இவ்வளவு பெரிய பெருமாள் கோயில் வேறு எங்கும் இல்லை. பல்லவ அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 5 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் 192 அடி உயரம் உள்ளது. அதில் 11 நிலைகள் உள்ளன.

இதை நடு நாட்டு திருப்பதி என்றும் அழைப்பார்கள். இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை ஆகாயத்தை நோக்கி இருக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். கோபுர வாசலில் ராஜகோபுரம், திருமங்கை மன்னன் கோபுரம் என நான்கு கோபுரங்கள் உள்ளன. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. தாயார் சன்னிதி மிக நீண்ட சன்னதியாக உள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களால் முதன் முதலாக பாடப்பெற்ற கோயில் இதுவாகும். அதனால் இதற்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்த தலம் என்கிற பெயரும் உண்டு. கோபுர நுழைவு வாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல் கோவிலை ஒட்டியுள்ள தெருக்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளன. ” அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக” என்று லட்சுமி நரசிம்மர் கோவில்கள் பெருமிதமாகவும் உணர்வு பூர்வமாகவும் பாடப்படுகிற பெரியாழ்வாரின் பாடல் வெளிப்பட்ட திருத்தலம் இது.

இங்கு பெருமாள் புஷ்பவல்லி தாயாருடன் காட்சி அளிக்கிறார். தேகலீச பெருமாள் உற்சவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பொன்னை ஆறு, கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. விஷ்ணு துர்க்கை இங்கு சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கும் ஒரே தலம் இதுதான். இங்கு ஒரே இடத்தில் இருந்து இருவரையும் தரிசனம் செய்யலாம்.

தினசரி காலை 4.30 மணியிலிருந்து 11 30 மணி வரைக்கும் மாலை 3 மணியில் இருந்து 9.30 வரைக்கும் கோயில் திறந்திருக்கும். புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அதிக நேரம் திறந்திருக்கும். மிருகண்டி முனிவருக்கு வாமன அவதார காட்சியை இறைவன் அளித்த தலம் இது . வாமன அவதாரத்தில் இறுதியில் இறைவன் அளித்த வாக்குறுதிப்படி வருடத்துக்கு ஒருமுறை தேச மக்களின் நலன் காண வரும் மகாபலியை வரவேற்க ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம் ஒட்டிய பத்து நாட்கள் திருவோணம் பண்டிகையாக கேரள மக்களால் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது .

இங்கும் வெகுவிமரிசையாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். சொர்க்க வாசல் திறப்பு, பங்குனி பிரமோற்சவம்,புரட்டாசி மாதத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்படும். சாளக்ராமத்தாலான தனிசன்னதி கிருஷ்ணருக்கு உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் புன்னை மரமாகும். இக்கோவிலுக்கு வந்து வணங்கினால் தோஷ நிவர்த்தி, திருமணம் நிச்சயம், கல்வி விருத்தி ஆகியன நடைபெறும்.

மூலவரின் திருமேனி தாருவால் ஆனது. ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமான தலமாக இது உள்ளது. நல்ல பதவி அடையவும் பதவி உயர்வு பெறவும் பதவி இழப்பில் இருந்து தப்பிக்கவும் இந்தக் கோவிலில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இங்குள்ள விஷ்ணுவின் சொரூபமான சக்கரத்தாழ்வாரை வழிபட சத்ரு தொல்லை நீங்கும். வாருங்கள், உலகளந்த பெருமாளை உத்தமனை உளமாற வணங்குவோம்.

Views: - 71

0

0