திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா:பரணி தீபம்..!

10 December 2019, 7:14 am
deepam-updatenews360
Quick Share

திருவண்ணாமலை :ஏகன் அனேகனாகி அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அண்ணாமலையார் கருவறையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.

10ம் நாளான இன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாகி அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்கு கொண்டு சென்று பரணி தீபத்தினை ஏற்றினார்கள்.

இந்த பரணி தீப தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.

முன்னதாக பரணி தீபத்தினை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ் தலைமையில் 8500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.