நினைத்தாலே முக்தி வரும் : திருவண்ணாமலை மகா ஜோதி தரிசனம்

3 December 2019, 10:04 pm
tvm-updatenews360
Quick Share

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 1-ம் தேதி கொடி ஏற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

முதல் நாள் காலையில் வெள்ளி விமானங்களிலும், இரவில் மூஷிகம், மயில் உட்பட பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். மேலும், 2-வது நாள் உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் காலையிலும் மற்றும் இரவு உற்சவத்தில் வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 3-ம் நாள் உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலையில் நடைபெற்ற உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் பூத வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து காட்சி கொடுத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழாவின் 4-ம் நாள் உற்சவம் புதன்கிழமை நடைபெற உள்ளது. காலையில் நடைபெறும் உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் நாக வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோரும், இரவில் நடைபெறும் உற்சவத்தில் வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் வலம் வர உள்ளனர்.