தோனியின் சாதனைகளை முறியடித்த DK… அதுவும் இதே தென்னாப்ரிக்கா கூட… அடுத்த தோனியாக மாறுகிறாரா…?

Author: Babu Lakshmanan
18 June 2022, 12:39 pm
Quick Share

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான நேற்றைய கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தோனியின் 2 சாதனைகளை முறியடித்துள்ளார்.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. முதலில் முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு, ஹர்திக் பாண்டியா – தினேஷ் கார்த்திக் கூட்டணி சிறப்பாக ஆடி, கவுரவமான இலக்கை நிர்ணயித்தது.

27 பந்துகளில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் தனது முதல் டி20 அரைசதத்தை பதிவு செய்தார் தினேஷ் கார்த்திக். பண்டியா 46 ரன்கள் சேர்த்தார். 170 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்ரிக்கா அணி , 87 ரன்களுக்கு சுருண்டது. இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இதன்மூலம், அதிக வயதுடைய, அதாவது 35 வயதுக்கு மேற்பட்ட ஒரு மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆட்ட நாயகன் வீருதை பெறுவது இதுவே முதல்முறையாகும். 37 வயதில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற தினேஷ் கார்த்திக், கடந்த 2021ல் 34 வருடங்கள், 216 நாட்களில் ஆட்டநாயகன் விருதை வென்றவர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

அதுமட்டுமில்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான தோனியின் 2 சாதனைகளை முறியடித்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 6 மற்றும் அதற்கு கீழ் வரிசைகளில் இறங்கி அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை தினேஷ் கார்த்திக் தற்போது தனதாக்கிக் கொண்டார். இதற்கு முன்னதாக, 2018ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20யில் தோனி 52 (நாட் அவுட்) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதேபோல, சர்வதேச டி20யில் 50க்கும் அதிகமான ரன்கள் எடுத்த சீனியர் இந்திய வீரர்கள் என்ற பெருமையும் தோனியிடம் இருந்து அவர் தட்டிப்பறித்தார். 2018ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 36 வருடங்கள், 229 நாட்களில் தோனி அரைசதம் அடித்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 37 வருடங்கள், 16 நாட்களில் அரைசதம்அடித்துள்ளார்.

Views: - 2048

0

0