ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலியா.. குறைந்த பந்தில் சதம் அடித்த மேக்ஸ்வெல் ; மைதானத்தில் செய்த செயலால் நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 6:43 pm

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் குறைந்த பந்தில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் வார்னர் (104), ஸ்மித் (71), லபுஷக்னே (62) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.

தொடர்ந்து, இறுதிகட்டத்தில் பேட்டிங்கிற்கு வந்த மேக்ஸ்வெல், நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். டெல்லி மைதானத்தில் சிக்சர் மழையை பொழிந்தார். இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. முதல் இன்னிங்ஸ் முடிய ஒருசில ஓவர்களே இருந்ததால், ஒரு கட்டத்தில் அவர் சதம் அடிப்பாரா..? மாட்டாரா..? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அனைத்தையும் ஓரங்கட்டி, பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார்.

இதனால், 40 பந்துகளில் சதம் அடித்து, உலகக்கோப்பை வரலாற்றி குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் பெற்றுள்ளார்.

இதுக்கு முன்னதாக தென்னாப்ரிக்க வீரர் மார்க்கரம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 49 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை முறியடித்துள்ளார். அயர்லாந்து வீரர் கேவின் ஓ பிரைன் (50 பந்துகள்), ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் (51), தென்னாப்ரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (52) ஆகியோர் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களாவார்.

அதேவேளையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்தில் சதமடித்த வீரர் தென்னாப்ரிக்காவை சேர்ந்த டிவில்லியர்ஸ். இவர் 31 பந்துகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து, நியூசிலாந்தைச் சேர்ந்த கோரி ஆண்டர்சன் (36), பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி (37), தற்போது மேக்ஸ்வெல் (40) அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

சாதனை சதம் அடித்த மகிழ்ச்சியில், இந்த சதத்தை தனது குழந்தைக்கு சமர்பிப்பது போன்று பேட்டை தாலாட்டும் விதமாக காண்பித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!