தொடர் தோல்வியால் விரக்தி… இங்., கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோ ரூட்.. புதிய கேப்டன் யார் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
15 April 2022, 2:19 pm
Quick Share

தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றவராக ஜோ ரூட் திகழ்ந்து வந்தார். 2018ல் சொந்த மண்ணில் இந்திய அணி 4-1 என்ற கணக்கிலும், 2020ல் தென்னாப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும்.

அதேபோல, கடந்த 2001ம் ஆண்டு இலங்கையை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோற்கடித்ததே கடைசியாகும். அதன் பிறகு, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 2021ம் ஆண்டில் 2-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி சாதனை படைத்தது.

ஆனால், இவருக்கு கடந்த சில மாதங்களாக மோசமானதாகவே இருந்து வருகிறது. டிசம்பர் – ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரை 0-4 என்ற கணக்கில் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி பறிகொடுத்தது.

பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கியுள்ள அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரையும் இங்கிலாந்து இழந்து அதிர்ச்சி கொடுத்தது. அடுத்தடுத்த தோல்விகளால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கேப்டன் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவு மிகவும் கடினமான ஒன்றாகும். இருப்பினும், எனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்கு தெரியும் இதுதான் சரியான நேரம். எனது நாட்டுக்கான அணியை தலைமை ஏற்று நடத்திய மிகவும் அற்புதமானதாகும். ஆனால், கடந்த சில நாட்களாக எவ்வளவு உயரத்திற்கு சென்றேனோ, அந்த அளவுக்கான பாதிப்புகளை எதிர்கொண்டு விட்டேன்.

புதிய கேப்டனுக்கு உதவிகரமாக இருப்பேன். அணியினருக்கும், பயிற்சியாளர்களுக்கும் முடிந்த ஆதரவளிப்பேன், எனக் கூறினார்.

அநேகமாக, இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அல்லது பட்லர் என இவர்களில் யாரேனும் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

Views: - 1065

0

0