ஒரே போட்டியில் இத்தனை சிக்சர்களா..? மலைபோல ரன்களை குவித்த பேட்டர்ஸ் ; இந்த சீசனில் CSK-RCB போட்டி தான் பெஸ்ட்!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 11:32 am
Quick Share

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் -கான்வே தொடக்கம் கொடுத்தனர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹானே – கான்வே இணை அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.

இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 53 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் மற்றும் ஹசரங்கா இருவரையும் சிக்சரை அடித்து சிஎஸ்கே வீரர்கள் வரவேற்றனர். ரகானே 37 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அவரது வேலையை துபே சிறப்பாக செய்தார். அதிரடியாக ஆடிய அவர் 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய கான்வே (83), ராயுடு (14), ஜடேஜா (10) ஆட்டமிழந்தாலும், மொயின் அலியும் அதிரடி காட்டினார். இதனால், சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்குடன் விளையாடிய பெங்களூரூ அணிக்கு கோலி 4 ரன்னிலும், லோம்ரோர் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தாலும், டூபிளசிஸ் – மேக்ஸ்வெல் இணை அதிரடி காட்டியது. இருவரும் மெகா சிக்சர்களை பறக்கவிட்டனர். ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி பக்கம் ஆட்டம் திரும்பியது. 12 ஓவர்களில் 141 ரன்களை எட்டிய நிலையில், மேக்ஸ்வெல் (76) அவுட்டானார். இதைத் தொடர்ந்து, அடுத்த ஓவரிலேயே டூபிளசிசும் (62) ஆட்டமிழந்தார்.

இதனால், மீண்டும் சென்னை அணியின் கை ஓங்கியது. இறுதியில் தினேஷ் கார்த்திக் (28), ஷபாஸ் அகமது (12), பிரபு தேஷாய் (19) வெற்றிக்காக போராடினாலும், பெங்களூரூ அணியால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியாக இந்தப் போட்டி அமைந்தது. இரு அணிகளும் சேர்ந்து 40 ஓவர்களில் மொத்தம் 444 ரன்கள் எடுத்துள்ளன. அதிலும் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. வெற்றி, தோல்வியைக் கடந்து, இந்தப் போட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 302

0

0