வரலாற்றில் முதல்முறை… உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் ; ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 8:01 pm

ஸ்காட்லாந்துக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹோல்டர் 45 ரன்களும், ஷெப்பேர்டு 36 ரன்களும் எடுத்தனர். ஸ்காட்லாந்து அணி தரப்பில் மெக்முல்லன் 3 விக்கெட்டும், சோலே, வேட், க்ரீவ்ஸ் ஆகியோர் தல 2 விக்கெட்டும், ஷரீஃப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி சிறப்பாக விளையாடியது. க்ராஸ் (74 நாட் அவுட்), மெக்முல்லன் (69) ஆகியோர் சிறப்பான பங்களிப்பினால், வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதன்மூலம், குரூப் ஏவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும்.

குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகளும் தகுதி பெற உள்ளன.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!