அறிமுகப் போட்டியிலேயே அமர்க்களம்… ரன் அடிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து… ஜாகீர்கான், நெஹ்ரா வரிசையில் அர்ஷ்தீப் சிங்…?

Author: Babu Lakshmanan
8 July 2022, 11:39 am
Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு 10,30 மணிக்கு சவுதம்டனில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணியில் பல இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹுடா ஆகிய இளம் வீரர்கள், இங்கிலாந்து அணியின் சீதோசன நிலையை தாக்குபிடித்து விளையாடுவார்களா..? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா (24) சுமாரான தொடக்கம் கொடுத்தாலும், தீபக் ஹுடா (33), சூர்யகுமார் யாதவ் (39), ஹர்திக் பாண்டியா (51) ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.

இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் முக்கிய வீரர்களான ஜெஷன் ராய் (4), பட்லர் (0), லிவிங்ஷ்டன் (0), சாம் கரன் (4) ஆகியோர் எளிதில் விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், இங்கிலாந்து அணியால் கடைசி ஓவரில் 3 பந்துகள் எஞ்சிய நிலையில், 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் முதல்முறையாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங், தான் வீசிய முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசியது, உலக கிரிக்கெட் அணிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இன்னிங்ஸின் 2வது ஓவரை வீசிய ஹர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை, முன்னணி அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜெஷன் ராய் எதிர்கொண்டார். அறிமுக போட்டியைப் போல அல்லாமல், ஒரு அனுபவ வீரர் வீசுவது போல, பந்துக்களை நேர்த்தியாக ஹர்ஷ்தீப் வீசினார். இதனால், அந்த ஓவரில் ராயால் ரன் குவிக்க முடியவில்லை. லெக் பைஸில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தமாக இந்த போட்டியில் 3.3 ஓவர்கள் வீசிய அவர், ஒரு மெய்டன், 18 ரன்களுடன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்

டி20 போட்டியில் அறிமுக ஆட்டத்தில் வீசிய முதல் ஓவரில் ரன்கள் ஏதுவும் வழங்காத ஹர்ஷ்தீப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதுடன், இந்திய அணியில் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் நுணுக்கர்கள் தெரிவித்த வருகின்றனர்.

Views: - 1817

0

0