கொரோனாவால் தத்தளிக்கும் RGNIYD கல்வி நிறுவனம்… மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப அறிவுறுத்தல்… தேதி குறிப்பிடாமல் மூடப்படுவதாக அறிவிப்பு

Author: Babu Lakshmanan
9 June 2022, 11:10 am

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாணவர்களின் நலன் குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தங்கி பயிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 235 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 21 பெண்கள், 8 ஆண்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 35 மாணவ மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் நிர்வாகம் மாணவ, மாணவிகளை தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளது. மேலும், 13ம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என உதவி பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • sasikumar freedom movie postponed due to financial issues ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?