கட்டுக் கட்டாக ரூ.1.80 கோடி கள்ள நோட்டு: கேரளா டூ கோவை….அதிர வைக்கும் நெட்வொர்க் பின்னணி…!!

22 April 2021, 12:54 pm
cbe kallanotu - updatenews360
Quick Share

கோவை: கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 கோடி கள்ள நோட்டு பணத்தை பறிமுதல் செய்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி மாநகரக் காவல்துறைக்கு உட்பட்ட உதயம்பெரூர் போலீஸார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்தனர்.

cbe fake rs - updatenews360

போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் பெயர் பிரியன் லால் என்பதும் அவரிடம் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் கோவை போத்தனூர் அருகேயுள்ள கரும்புக்கடை வள்ளல் நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் பதுக்கி வைத்திருக்கும் தகவல் தெரிந்தது. இதையடுத்து, கொச்சி மாநகரக் காவல்துறையின் உதயம்பெரூர் போலீஸார் கோவையில் உள்ள வள்ளல் நகர் பகுதிக்கு நேற்று இரவு வந்தனர்.

அங்குள்ள அஷ்ரப் அலி (24) என்பவரது வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அவரிடம் ரூ.2,000 மதிப்புள்ள 4 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர் அளித்த தகவலின் பேரில், தெற்கு உக்கடத்தில் உள்ள அல் அமீன் காலனியில் உள்ள பானிபூரி வியாபாரி சையது சுல்தான் (32) என்பவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், அவரது வீட்டில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.80 கோடி மதிப்புள்ள ரூ.2,000 தாள் அடங்கிய கள்ள நோட்டுகள் சிக்கின.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த கேரள போலீஸார், அஷ்ரப் அலி, சையது சுல்தான் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டவர்களின் நண்பர்களான அசாருதீன், ரஷீத் ஆகியோரையும் கேரள போலீஸார் இன்று கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அஷ்ரப் அலி

முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கள்ள நோட்டுகளை அச்சடித்து, கடந்த மூன்று மாதங்களாக உக்கடம், அல் அமீன் காலனி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சையது சுல்தான்

கோவையில் கட்டுக் கட்டாக கோடி கணக்கில் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 202

0

0