கோவை நீதிமன்ற வளாகம் முன்பு கத்திக்குத்து: கொலைக்கு பழிதீர்க்க வந்தவர்களை 12 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்..!

Author: Aarthi Sivakumar
28 August 2021, 5:54 pm
Quick Share

கோவை: கோவையில் குண்டுவெடிப்பு அமர்வு நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 12 மணி நேரத்தில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வினோத்குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்த விஜயகுமார் மற்றும் ஜப்பான் என்கிற ஹரிகரன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படியிருக்க இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

கோவை மாநகர மத்திய சரக காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார்,விக்னேஷ் மற்றும் காவலர்கள் ஞானவேல், மாதேஸ்வரன், சுகந்த ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளைக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர்.

தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட கருப்புச்சாமி ,பிரவீன், சங்கர்,அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர் கப்பீஸ் குமார்,ராஜ்குமார் ஆகியோரை 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இதில் அவர்கள் பயன்படுத்திய கத்தி, அரிவாள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தனிப்படையினர் 12 மணி நேரத்தில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு மாநகர காவல் துறையின் உயரதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Views: - 417

1

0