தங்கை மகளுக்கு தாய்மாமன் செய்த சீர் : ‘கிழக்கு சீமையிலே’ படத்தை விஞ்சிய வியக்க வைத்த பாசம்!!

28 January 2021, 7:25 pm
Thaimaman Seer - Updatenews360
Quick Share

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டியில் தங்கை மகளுக்கு பாரம்பரிய முறைப்படி 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ சீர் கொண்டு சென்ற தாய்மாமனின் செயல் உறவினர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வருபவர் ராஜா. இவரது மனைவி தாரா தேவியும் மருத்துவர் என்பதால் இருவரும் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர்.

மருத்துவர் ராஜாவின் தங்கையான மோகனப்பிரியாவிற்கு திருமணமாகி ரிதன்யா, மித்ராஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த இரு பெண்களும் பூப்படைந்ததால் ஒரே நாளில் இருவருக்கும் சடங்கு செய்யும் நிகழ்வு, மோகனபிரியா – முத்துக்குமார் தம்பதிகளின் விவசாய தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இவ்விழாவிற்கு தாய் மாமன் சீதனம் அளிக்க வேண்டும் என்பதால், வழக்கப்படி தாய் மாமனான ராஜா தங்கையின் மகள்களுக்கு சிறப்பான சீர் கொடுக்க திட்டமிட்டு அதையும் பாரம்பரிய முறையிலும் அனைவரும் வியக்கும் விதத்தில் அமையவேண்டும் என்ற எண்ணத்திலும் 100க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளை தாங்களே தயாரித்து 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோபி செட்டிபாளைத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மருத்துவரான ராஜாவே மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். இந்த நிகழ்வை காணும் போது, கிழக்கு சீமையிலே திரைப்படத்தை விஞ்சும் அளவு இருந்தது.

தாய்மாமன் வந்த மாட்டுவண்டி பின்னே, உறவினர்களும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட கார்களிலும் பின்னால் அணிவகுத்து வந்தனர். மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து வியந்தனர்.

மேலும் சடங்கு நடைபெறும் வீட்டிலும் பாரம்பரிய முறையிலும் நவநாகரீக காலத்திற்கு முன்பு முன்னோர்கள் காலத்தில் செய்யப்பட்ட அலங்காரம் போல் தென்னை ஓலையில் நெய்த அழகு பொருட்களும் ஓலை குடிசையும் பாரம்பரிய நெல்களை கொட்டி அதில் வைத்த சீர் வரிசை தட்டுகளும் அதேபோல் பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளும் உற்றார் உறவினர்களை 30 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளியது.
காங்கேயம் காளைகள், வெள்ளாடுகள் போன்ற கால்நடைகள் கண்காட்சியும் உறவினர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பாரம்பரியத்தை பறைசாற்றவும் வருங்கால சன்னதிகளுக்கு பாரம்பரியத்தை நினைவு கூறவும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாரம்பரிய முறைப்படி தனது தங்கை மகள்களுக்கு பூப்பு நன்னீராட்டு விழா நடத்தியுள்ளதாக தாய் மாமன் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த பூப்பு நன்னீராட்டு விழா நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் விழா முடிந்து வெளியில் செல்லும் போது கிராமப்புற திருவிழாவிற்கு வந்து சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், அழிந்து வரும் பாரம்பரிய அரிசியில் உணவு சமைத்து பரிமாறப்பட்டது வரவேற்கதக்கது என்றும் வியந்து பாராட்டினர்.

Views: - 16

0

0