எஸ்ஐ மீது அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன்… துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்… நெல்லையில் பயங்கரம்!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2025, 2:29 pm
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த மோதலைத் தடுக்க முயன்ற எஸ்ஐ முருகன் மீது கும்பலில் இருந்த ஒருவர் தாக்குதல் நடத்திவிட்டு, அவரது வீட்டில் பதுங்கினார்.
இதனையடுத்து, எஸ்ஐ முருகன் 17 வயது சிறுவனை பிடிக்க முயன்றபோது, மீண்டும் மோதல் உருவானது. இந்த மோதலின் போது, சூழ்நிலையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், 17 வயது சிறுவன் காயமடைந்ததுடன், எஸ்ஐ முருகனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் கூறுகையில், பாப்பாக்குடியில் ஏற்பட்ட மோதலின் போது, எஸ்ஐ முருகன் மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் காயமடைந்த 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு இளஞ்சிறார்கள் மீது ஏற்கனவே பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட நான்கு வன்கொடுமை வழக்குகள் உள்ளன, என்று தெரிவித்தார். போலீசார் இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
