களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு: சிறந்த மாடுபிடி வீரர்களாக 2 பேர் தேர்வு…!!

14 January 2021, 6:26 pm
madurai - updatenews360
Quick Share

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாடுபிடிவீரர்கள் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதையடுத்து மாலை 4 மணி வரை 8 சுற்றுகள் நடைபெற்றது இதில் 523 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரரும், முத்துபட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரரும் தலா 26 காளைகளை அடக்கியதாக இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுதொகை 1லட்சம் பகிர்ந்து வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக மதுரையை சேர்ந்த ஜி.ஆர். கார்த்திக் என்பவருக்கு சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டு பைக் மற்றும் 1 லட்சம் பரிசுதொகை வழங்கப்பட்டது. போட்டியின் முடிவில் மாடு பிடி வீரர்கள் 47பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 11பேர், பார்வையாளர் இருவர் என 60 பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்த தத்தனேரி பகுதியை சேர்ந்த ஜல்லிகட்டு காளை ஒன்று கயிறு இறுகியதால் உயிரிழந்தது. முன்னதாக போட்டியினை அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேரில் கண்டுமகிழ்ந்து மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். இதேபோன்று புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த போட்டியின் நடுவே 6 வது சுற்று நடைபெற்றுகொண்டிருந்தபோது
மாடுபிடி வீரர்களாக வந்த வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகளான திருப்புவனம் பகுதியை சேர்ந்த வினோத், அவனியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரும் அவனியாபுரம் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடியை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் அழைத்துசென்றதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே வாடிவாசல் அருகே காளை அவிழ்க்கும் இடத்தில் காளையை வரிசையில் அவிழ்ப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மதுரை கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்த அருண்குமார், தேவேந்திரன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியதில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 11

0

0