230 பேரை கடத்தி மொட்டை அடித்து சட்டவிரோதமாக அறையில் அடைப்பு? கிறிஸ்துவ விடுதியில் நடந்தது என்ன? பாஜக புகார் : பாய்ந்த நடவடிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2022, 1:08 pm
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கிறிஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுற்றுவட்டார பகுதியில் நேற்றும் முன் தினமும் சிலர் காணமால் போவதாக சிலருக்கு தகவல் பரவியிது. இன்று காலை அட்டுக்கல் வனப்பகுதி அடிவாரத்தில் சிலர் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் , காப்பற்றுங்க என்று இரவு முழுவதும் கூச்சம் அழுகை சத்தம் கேட்பதாக அருகில் உள்ள பழங்குடி மக்கள் மூலம் தகவல் பரவியது.
அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு சில பொதுமக்கள் வந்து பார்த்த பொழுது அனைவரும் மொட்டை அடித்து 10, 16 அறையில் 50 க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர்.
பேரூர் தாசில்தார் இந்துமதி விசாரணை செய்தார். அப்போது, பல்வேறு டிரஸ்ட்களின் ஒருங்கிணைப்பாளர்களான வடவள்ளியை சேர்ந்த ஜிபின், சைமன் செந்தில் குமார் ஆகிய இருவரும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 200க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மறுவாழ்வு அளிக்க தங்க வைத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் ஆட்களை அழைத்து வந்தது தெரியவந்தது.
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டிருந்த தங்களை, இவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து மொட்டை அடித்ததாகவும், அடித்து துன்புறுத்தி காயப்படுத்தியதாகவும் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் வேகமாக பரவியதால், பொதுமக்கள், பா.ஜ.க, மற்றும் இந்து முன்னணியினர் என, 500க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
சட்டவிரோதமாக அழைத்து வந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். ஏ.டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டதில், அழைத்துவரப்பட்ட, 230 பேரில் சிலர் மாற்றுத்திறனாளிகளும், மற்றவர்கள் நல்ல மனநிலையில் இருப்பதும் தெரியவந்தது. இவர்களின் பெயர், முகவரியுடன், வாக்குமூலமும் பெறப்பட்டது. தொடர்ந்து, அவரவர் விரும்பும் இடங்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெகு நேரமாகியும் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், அங்கு கூடியிருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு, பா.ஜ.க, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி நேரில் வந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ‘டிரஸ்டி’யினருக்கு சொந்தமான வேனை அங்கிருந்தவர்கள் கீழே தள்ளி உருட்டினர். தொடர்ந்து, தெற்கு ஆர்.டி.ஓ., இளங்கோ நேரில் வந்து, அதிகாரிகளிடம் விவகாரம் குறித்து கேட்டறிந்தார்.
இரவு, 7:30 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி., பத்ரி நாராயணன் டிரஸ்டியினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பின், டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து, இந்து மதி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை சேர்ந்த ஜிபின் பேபி (44), கோவை அடைக்கல கரங்களை சேர்ந்த சைமன் செந்தில்குமார் (44), சத்தியமங்கலம் பரலோகத்தின் பாதை டிரஸ்ட்டை சேர்ந்த ஜார்ஜ் (54), சென்னை புகலிடம் டிரஸ்ட்டை சேர்ந்த செல்வின், 49, தருமபுரி மீட்பு டிரஸ்ட்டை சேர்ந்த பாலச்சந்திரன் (36), விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை சேர்ந்த அருண் (36), ஆகிய, 6 பேர் மீதும், 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
0
1