டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம்: KTM பைக்கில் வந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது..!!

Author: Rajesh
1 May 2022, 10:02 am

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பட்டப்பகலில் 14 1/2 சவரன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சியால் 3 கொள்ளையர்கள் சிக்கினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராம் தீபிகா. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் பணி முடித்து விட்டு மதியம் காரமடை காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது,அவரை பின்தொடர்ந்து விலையுயர்ந்த பைக்கில் வந்த மூவர் ராம்தீபிகா அணிந்திருந்த மொத்தம் 14 1/2 சவரன் மதிப்புள்ள தாலிச்செயின் உள்ளிட்ட நகைகளை பறித்துச்சென்றுள்ளனர்.இதுகுறித்து மருத்துவர் ராம் தீபிகா காரமடை காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.அப்போது,மூன்று இளைஞர்கள் விலையுயர்ந்த கேடிஎம் பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காரமடை காவல் துறையினர் இவ்வழக்கு சம்பந்தமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரஞ்சித் குமார்(22),அஜீத் குமார்(20) மற்றும் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த அபிஷேக் குமார்(23) உள்ளிட்ட மூவரை வாகன சோதனையின் போது பிடித்துள்ளனர்.பின்னர்,அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சாத்தூரை சேர்ந்த ரஞ்சித் குமார்,அஜீத் குமார் உள்ளிட்ட இருவரும் தற்போது கோவை விளாங்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து அவர்களது நண்பரான அபிஷேக் குமாருடன் சேர்ந்து மேட்டுப்பாளையம் மருத்துவர் ராம்தீபிகாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தினையும் பறிமுதல் செய்தனர். மேலும்,போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்ட மூவர் மீதும் சரவணம்பட்டி,அன்னூர்,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.சம்பவம் நடந்து 5 நாட்களுக்குள் வழிப்பறி கொள்ளையர்கள் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!