வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பெண்கள் உள்பட 3 பேர் பலி..!!

24 January 2021, 1:45 pm
van accident - updatenews360
Quick Share

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் காஜா சாகுல்அமீது. குவைத்தில் வேலை பார்க்கும் இவர், ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தார். அவர் மதுரையில் இருந்து விமானம் மூலம் குவைத் செல்ல முடிவு செய்திருந்தார்.

இதற்காக வீட்டில் இருந்து ஆம்னி வேனில் புறப்பட்டார். அவருடன் மனைவி ரூபினா, மகள் ரகுமத் பாத்திமா, இனாத், மாமியார் ஷாஜகான் பீவி ஆகியோரும் வழியனுப்ப புறப்பட்டனர். அகமது அசன் என்பவர் ஆம்னி வேனை ஓட்டி சென்றுள்ளார்.

இந்த ஆம்னி வேன் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி தபால்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 வேன்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஆம்னி வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

டிரைவர் அகமது அசன், முன் இருக்கையில் இருந்த காஜா சாகுல்அமீது ஆகியோர் இருக்கையிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஷாஜகான் பீவியும் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த ரூபினா, ரகுமத் பாத்திமா, இனாத் ஆகியோர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வேனில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0