புலி கடித்து 4 பேர் பலி… சாலை மறியல் போராட்டம் எதிரொலி : புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan1 October 2021, 5:07 pm
நீலகிரி : கூடலூர் அருகே கடந்த ஏழு நாட்களாக மனிதர்களையும் கால்நடைகளையும் கொன்றுவரும் ஆட்கொல்லி புலி இன்று மீண்டும் ஒருவரை அடித்துக் கொன்றதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மேபீல்டு பகுதியில் கடந்த ஏழு நாட்களாக ஆட்கொல்லி புலி மிகுந்த அட்டகாசம் செய்து வருகிறது 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் 3 மனிதர்களைக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர் பாடி இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது.
இதனிடையே மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக, கேரள , கர்நாடக, இணைக்கும் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே உதகையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது ஏற்கனவே புலி நடமாட்டத்தால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என கூறி வந்த நிலையில் தமிழகம் கேரளா கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து புலியை கண்டால் சுட்டுக்கொல்ல வேண்டும் என தமிழ்நாடு வன உயிரின பாதுகாவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுவரை 4 பேரை புலி கடித்து கொன்றுள்ளது குறிப்பிடதக்கது.
0
0