நாங்குநேரி கோவில் உண்டியலில் 46 அமெரிக்க டாலர்கள்.. சிசிடிவி உதவியுடன் பக்தரை தேடும் நிர்வாகம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 4:27 pm

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இராஜாக்கள் மங்கலம் பெரும்படையார் சாஸ்தா கோயில் மிகவும் பழமையான கோவிலாகும்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இக்கோவிலுக்கு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் ஆண்டு முழுவதும் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 3 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவின் கண்காணிப்பில் உள்ள இந்த உண்டியல்களுக்கு அலாரம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகைக்கு ஏற்ப ஓர் ஆண்டில் உண்டியல் இரண்டு அல்லது மூன்று முறை எண்ணும் வழக்கம் இங்கு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் நாங்குநேரி வட்டார ஆய்வாளர் லதா மேற்பார்வையில் கோவில் நிர்வாக அலுவலர் முருகன் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கும் பணி இன்று நடந்தது.

அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் வெளியே எடுக்கப்பட்டு எண்ணப்பட்டது.

அப்போது வழக்கமான இந்திய நாணயங்கள் மற்றும் பணங்களுடன் அமெரிக்க டாலரும் காணிக்கையாக செலுத்தி இருப்பது தெரிய வந்தது.

அதில் 10 டாலர்கள் மதிப்புள்ள 2 தாள்கள் ஐந்து டாலர் மதிப்பிலான ஒரு தாளும், ஒரு டாலர் மதிப்புள்ள 21 டாலர்களும் ஆக மொத்தம் 46 அமெரிக்க டாலர்களை யாரோ ஒரு பக்தர் காணிக்கையாக செலுத்தியது தெரிய வந்தது.

உண்டியல் எண்ணிக்கையின் போது கிடைத்த அந்த டாலர்களை முறைப்படி கோவில் கணக்கு வைத்துள்ள வங்கியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மேலும் இந்திய மதிப்பிலான நாணயங்கள் மற்றும் 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் தாள்கள் என ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 408 ரூபாய் உண்டியல் மூலம் வசூல் ஆகியுள்ளது.

கோவில் உண்டியலில் அமெரிக்க டாலரை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?