கொடுத்த கடனை திருப்பி தராததால் 7 வயது சிறுவன் கடத்தல் : கோவையில் பதுங்கியவனை 8 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!!

10 June 2021, 8:07 pm
Kidnap Arrest - Updatenews360
Quick Share

தருமபுரி : கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கொடுக்காததால் பணம் வாங்கியவரின் 7 வயது மகன் கடத்தல். சுமார் 8 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட தருமபுரி நகர காவல் துறையினர்.

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு அபிநயா என்ற மனைவியும், அஜித், ஹரிஷ் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனரான ராஜசேகருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணகுமார் தருமபுரி வரும் போதெல்லாம் ராஜசேகர் வீட்டில் தங்குவது வழக்கம்.

இந்நிலையில் ராஜசேகருக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் சரவணகுமார் கொடுத்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ராஜசேகரின் மனைவி அபிநயாவும் ராஜசேகரின் தாய் மாதம்மாள் இருவரும் சேர்ந்து சரவணகுமாரிடம் கடனாக 80 ஆயிரம் ரூபாய் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சரவணகுமார் தான் கொடுத்த பணத்தை கேட்டபோது தற்போது எந்தப் பணமும் எங்களிடம் இல்லை என இருவரும் கூறியுள்ளனர். மேலும் வழக்கம்போல் கோயம்புத்தூரில் இருந்து சரவணகுமார் ராஜசேகரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்து தங்கியுள்ளார்.

நேற்று காலை ராஜசேகரின் இரண்டாவது மகன் ஹரிசை சரவணகுமார் கடத்திச் சென்றுவிட்டார் என நேற்று மதியம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் நகர பி1 காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவனை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் சரவணகுமார் சொகுசு காரில் அங்கிருந்து சென்றது பதிவாகி இருந்தது. மேலும் சரவணகுமாரின் செல்போன் நம்பரை வைத்து பேச்சு கொடுத்தவாறு தேடியதில் அவர் கோவையில் இருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த சரவணகுமாரை காவல் துறையினர் மடக்கி பிடித்து அவருடன் இருந்த சிறுவனையும் மீட்டு தருமபுரிக்கு கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து சிறுவனை கடத்திய சரவணகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகார் கொடுத்த சுமார் 8 மணி நேரத்தில் தருமபுரி நகர காவல் துறையினர் சிறுவனை மீட்டு கொண்டு வந்ததை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் வெகுவாக பாராட்டினார்.

Views: - 138

1

0