வெளிநாடுகளிலிருந்து வந்த 70 பேர் கோவையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு…

Author: Udhayakumar Raman
6 December 2021, 10:11 pm
Quick Share

கோவை: தென் ஆப்பிரிக்கா உள்பட மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள 12 நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 70 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகையே இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகையாக உருமாற்றமடைந்துள்ளது. டெல்டா உள்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமிக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, சிங்கப்பூர், ஹாங்காங், இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை ஒமிக்ரான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மிகத்தீவிரமாக பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங் உள்பட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களை 7 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட 12 நாடுகளில் இருந்து கடந்த 5 நாள்களில் கோவைக்கு வந்த 70 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது:-கோவைக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் இருந்து மட்டுமே சர்வதேச விமானப் போக்குவரத்து உள்ளது. தினசரி 150 முதல் 170 பயணிகள் வரை கோவை வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை யாருக்கும் நோய்த் தொற்று பாதிப்பில்லை. தவிர தென் ஆப்பிரிக்கா உள்பட மத்திய அரசு அறிவித்துள்ள 12 நாடுகளில் இருந்து 70 பேர் வந்துள்ளனர். இவர்களுக்கும் நோய்த் தொற்று பாதிப்பில்லை.

இருந்தும் 70 பேரையும் 7 நாள்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்களா என்று கண்காணிக்க உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

Views: - 139

0

0