ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் நாளை முதல் விருப்ப மனு: அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
14 September 2021, 10:18 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ‘‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தின் கட்டணத் தொகை ரூ. 5 ஆயிரம். ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தின் கட்டணத் தொகை ரூ. 3 ஆயிரம். தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம். மாவட்ட அ.தி.மு.க. அலுவலகங்களில் உரியக் கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கலாம். தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டும், முகக்கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் விருப்ப மனுக்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Views: - 145

0

0